இடஒதுக்கீடு-ஜெயலலிதாவுக்கு வன்னியர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்தியாவுக்கே கலங்கரை விளக்கமாகவும், 'வாழும் பெரியாராகவும்' விளங்குவதாக வன்னியர் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 13ம் தேதி உச்சிநீதிமன்றம் 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
1993ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனி சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி 9வது அட்டவணையில் சேர்க்க செய்து இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்ந்து வரலாறு படைத்தார்.
இதன் பலனாக உச்சநீதிமன்றம் 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் ஜெயலலிதா இந்தியாவுக்கே கலங்கரை விளக்கமாகவும், வாழும் பெரியாராகவும் உள்ளார்.
இந்த வரலாற்றுக்கு முழு காரணமாக அமைந்தவரும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்துவதுதான் எங்களின் தலையாய கடமையாகும்.
இது குறித்து ஜெயலலிதாவிடம் தேதி கேட்டிருக்கிறோம். விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொள்வார். அடுத்த மாதம் சென்னையில் பாராட்டு விழா நடைபெறும். இந்த பாராட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து சில சீட்களையும் பெற இந்த அமைப்பு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications