டிவிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம்-விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தனியார் தொலைக்காட்சிகளில் போலி டாக்டர்கள் மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விசாரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், முறையான உரிமம் பெறாமல், ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் நபர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எய்ட்ஸ், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து தங்களால் முழுமையாகக் குணமடையச் செய்ய முடியும் என்று ஏராளமானோர் தனியார் சேனல்களில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் முறையான உரிமம் பெற்ற டாக்டர்கள்தானா என்பது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தும் டாக்டர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே அவர்களின் நிகழ்ச்சியை அனுமதிக்கிறோம். மக்கள் நலனில் அக்கறையுள்ள நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்கிறோம்.
போலி டாக்டர்களுக்கு தொலைக்காட்சிகளில் வாய்ப்பு அளிப்பது கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், போலி டாக்டர்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
அனைத்து பதில்களையும் பரிசீலித்த நீதிபதி நாகமுத்து, இப்போது போலி டாக்டர்கள் மருத்துவ நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனினும், போலி டாக்டர்களை அனுமதிக்க முடியாது.
எனவே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தும் டாக்டர்களின் உண்மைத் தன்மை குறித்த விவரங்களை காவல் துறை ஆராய வேண்டும்.
இதற்காக துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவரை டி.ஜி.பி. நியமிக்க வேண்டும். காவல் துறையினரின் ஆய்வுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த ஆய்வில் போலி டாக்டர்கள் நிகழ்ச்சி நடத்துவது கண்டறியப்பட்டால், அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தொலைக்காட்சி நிறுவனம் கைவிட வேண்டும். இத்தகைய ஆய்வின்போது தொலைக்காட்சி நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு காவல் துறை நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications