டாஸ்மாக் வருவாயை விட மக்கள் அமைதிதான் முக்கியம்-உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் அமைதியான வாழ்க்கைக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய்க்குக் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளி ஆகியவற்றுக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு வருபவர்களால் பொதுமக்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த கடையை மூட வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, கடந்த 8.6.2010-ல் தீர்ப்பளித்தார். அதில், டாஸ்மாக் கடையை 4 வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதில், வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில்தான் ஆர்ம்ஸ் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை இடம் மாற்றினால், அதனால் மதுபான விற்பனை வருவாய் குறையும். எனவே, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எலிபே தர்மா ராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

எந்த இடத்தில் மதுபானக் கடை இருந்தாலும், அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுமானால் அந்தக் கடையை அப்புறப்படுத்துமாறு கோரும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.

மதுபானக் கடைக்கு குடிக்க வரும் நபர்களால் பொதுமக்களுக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக மாநகர காவல் துறை இணை ஆணையர் தனி நீதிபதி முன்பு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயைவிட, பொதுமக்களின் அமைதி என்பது மிகவும் முக்கியம். அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க முடியாது.

ஆர்ம்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் ஒப்புக் கொண்டு, காலக்கெடு கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று, 6 வார காலத்துக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+