குமரி மாவட்டத்தில் தொடரும் மர்ம காய்ச்சல்: மேலும் 2 பேர் பலி
திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் வார்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 8 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையி்ல் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நேற்று பலியாகி உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஆளூர் அருகே உள்ள புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் கோகுல்ராஜ். இவர் கங்கான்கடையில் உள்ள பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவரை கடந்த 2 நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதே போல் ஆளூரை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். குமரியில் தொடர்ந்து வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications