சென்னையில் என்ஜினீயரிங் மாணவர் கடத்தல்: கடத்தியவர்கள் மீது பரபரப்பு புகார்
சென்னை: சென்னையில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரை ஒரு குமபல் காரில் கடத்திச் சென்றுள்ளது. அவரை நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்து, கொடுமைப்படுத்தி பின்னர் விடுவித்துள்ளது.
நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்களுடன் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட போட்டி தான் இந்த கடத்தலுக்கு காரணம்.
டெல்லியைச் சேர்ந்தவர் சஞ்சய் சவுக் (50). இவர், ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் உட்கார் சவுக் (19), சென்னை அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர். சென்னை செகரட்டேரியேட் காலனி பராக்கா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தங்கி படிக்கிறார். கல்லூரிக்கு தினமும் கல்லூரி பேருந்தில் சென்று வருகிறார்.
நேற்று காலை 6 மணியளவில் செகரட்டேரியட் காலனி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவரை கடத்திச் சென்றுவிட்டனர்.
காலையில் கடத்தப்பட்ட அவரை பிற்பகல் 2 மணியளவில் தியாகராய நகர் பகுதியில் இறக்கிவிட்டனர். இதையடுத்து அவர் செகரட்டேரியட் காலனி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என்னை கடத்திய 4 பேரையும் எனக்கு தெரியும். நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடனமாடுவேன். என்னோடு நிறைய அழகிய இளம் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு நடனமாடுவார்கள்.
இந்த நடன நிகழ்ச்சியில் அந்த 4 பேரும் அடிக்கடி கலந்து கொள்வார்கள். அவர்களைப் பற்றிய விவரம் ஒன்றும் எனக்கு தெரியாது. ஆனால், அவர்களைப் பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும்.
அந்த நடன நிகழ்ச்சியில் இளம் பெண்கள் அனைவரும் என்னுடன் மட்டும் ஆடுவதால், நான் இனி அங்கு வரக் கூடாது என்றும், மீறி வந்தால் என்னைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள். காரில் கடத்திச் செல்கையில் என் கண்களை கருப்பு துணியால் கட்டிவிட்டனர். விமானத்தின் சத்தத்தை வைத்து தான் நான் விமான நிலையம் அருகில் உள்ள வீட்டில் அடைக்கப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன்.
அந்த கடத்தல்காரர்கள் என்னிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு சித்ரவதை செய்தனர். என்னை நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்தனர். அவர்கள் என்னை கடத்தியதாக போலீசுக்கு தகவல் கொடுத்தால் அந்த நிர்வாணப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார்கள். எனது தந்தையால் நீங்கள் கேட்கும் ரூ.20 லட்சத்தை கொடுக்க முடியாது. அதனால் நான் இனிமேல் அந்த நடன நிகழ்ச்சி நடக்கும் பக்கமே வரமாட்டேன் என்று கூறினேன்.
இதற்கிடையே அவர்கள் என்னிடம் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், நான் அணிந்திருந்த தங்க பிரேஸ்லெட்டையும் பறித்துக் கொண்டனர். என்னை சுமார் 6 மணி நேரம் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications