683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: ஆகஸ்ட் 2வது வாரம் நேர்காணல்
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது. அவற்றை நிரப்ப 683 புதிய அரசு மருத்துவர்களை அரசு விரைவில் நியமிக்கவுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ள மருத்துவர்கள் மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். ஒப்பந்த விதியின் கீழ் (10 ஏ1) நியமிக்கப்படும் அரசு மருத்துவர்களின் மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம்.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களின் எண்ணிக்கை 1,589. இவற்றில் மொத்தம் 3, 987 மருத்துவர்கள் பணி புரிகின்றனர். இருப்பினும் அந்த மையங்களில் தற்போது 702 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களில் 683 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பணிகளுக்கான நேர்காணலை இந்த மாதம் இரண்டாவது வாரம் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2008-2009-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் கூட நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே 34 விஷமுறிவு சிகிச்சை மையங்கள் உள்ளன. இவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 55,000 பேர் விஷமுறிவு சிகிச்சை பெற்றுள்ளனர். அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 98 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.
எனவே, விஷமுறிவு சிகிச்சை மையத்தின் முக்கியத்துவத்தை கருதில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் ரூ.4 கோடியில் மேலும் 32 விஷமுறிவு சிகிச்சை மையங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது மட்டுமின்றி ரூ.33 கோடியில் கூடுதலாக 200 அவசர சேவை ஆம்புலன்ஸ்கள் ('108') வாங்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவைகளுக்கான அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications