இளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்', மாநில அரசின் திட்டம் தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திரா வீட்டு வசதி திட்டத்திற்கும், தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கும் இடையே உள்ள வி்த்தியாசம் கூடத் தெரியாமல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவ்வாறு தவறான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடர்பாக இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, காங்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.45 ஆயிரம், மாநில அரசு வழங்குவது ரூ.15 ஆயிரம் தான். ஆனால் இத்திட்டத்துக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறாரே?

பதில்: அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் சொல்லுகின்ற திட்டம் வேறு, தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் வேறு. இரண்டையும் புரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார். காங்கிரீட் வீடுகட்டித் தரும் திட்டம் என்று அவர் கூறுவது ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருந்த இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டமாகும். இத்திட்டம் 1997-98ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், வீடில்லாத ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிடர்கள் அல்லாத ஊரக ஏழை மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.

இத்திட்டத்திற்கு 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் இந்திராகாந்தி அம்மையாரின் பெயரால் உள்ளத்திட்டம். இதற்கும் இப்போது இந்த ஆண்டு தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

தற்போது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் பற்றி ஆளுநர் உரையிலே கூறும்போது, இந்திரா வீடு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கும் இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதல் கட்டமாக ஊரகப்பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.

2010-2011ம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்தில் மண்சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக, நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித் தரப்படும்.

இத்திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் நிரந்தர வீடுகள் ரூபாய் 1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் இந்த உன்னதத் திட்டம் கலைஞர் வீட்டு வசதித்திட்டம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அது அறிவிப்போடு இல்லாமல் நிதிநிலை அறிக்கையிலும் கூறப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செய்யப்படும் திட்டத்திற்கு கலைஞர் பெயரா? அது என்ன நியாயம்? என்றெல்லாம் இளங்கோவன் கேட்பது, கூட்டணியை வலுப்படுத்துகின்ற செயல் அல்ல, வலிப்படுத்துகின்ற காரியமாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+