திமுக ஆட்சியில் தலித் ஐஏஎஸ் அதிகாரி பழிவாங்கப்படுகிறார்-இளங்கோவன் கடும் பாய்ச்சல்

திமுகவுக்கும், இளங்கோவனுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அவரது சீண்டல், முதல்வர் கருணாநிதியையும் கோப்படுத்தி வருகிறது. இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்க்காது, மாறாக வலியையே சேர்க்கும் என்று முதல்வர் சூடாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார் இளங்கோவன். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் படு சூடாக பேசினார். இன்னும் சொல்வதானால் முன்பை விட சூடாக பேசினார் இன்று.
இளங்கோவன் பேச்சிலிருந்து...
தலித் ஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார்கள்
காமராஜர் பெயரை பயன்படுத்துவதை எல்லா கட்சிகளும் பேஷனாக கொண்டுள்ளது. காமராஜர் ஆட்சி எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். காங்கிரஸ்காரர்களுக்கும் தெரியும் ஆனால் அரசியல்வாதிகளுக்கு தெரியாது.
இந்த ஆட்சியில் ஒரு தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பழி வாங்கப்படுகிறார். காமராஜர் ஆட்சியில் 2 கோடி 3 கோடி கொடுத்ததெல்லாம் துணைவேந்தர் ஆக முடியாது.
காமராஜர் ஒழுக்க சீலர். தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் அல்ல. பெற்ற தாயை கூட தள்ளியே வைத்திருந்தார்.
நான் சாமியாராகத்தான் வேண்டும்!
இதையெல்லாம் நான் பேசக் கூடாது என்றால் சாமியாராகி இமயமலைக்கு தான் செல்ல வேண்டும். காமராஜர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து ஜெயிலுக்கு போகவில்லை. சுதந்திர போராட்டத்துக்காக ஜெயிலுக்கு சென்றார்.
அவர் நினைத்து இருந்தால் இலவச ரேடியோ, ஒரு அணாவுக்கு அரிசி கொடுத்து மக்களை தக்க வைத்து இருக்க முடியும். ஆனால் அவருக்கு ஒட்டு முக்கியம் அல்ல. மக்கள் நலன்தான் முக்கியம். எனவேதான் கல்வியை கொடுத்தார்.
நான் பேசினால் வலிக்கிறதா?
நான் சில விஷயங்களை பேசுவதால் வலிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நான் கூட்டணியை வலுப்படுத்தவே சில கருத்துக்களை கூற வேண்டி உள்ளது.
கடந்த 31-ம் தேதி திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி பற்றி திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.
திருச்செந்தூர் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ராஜீவை பற்றியும், ராகுலைப் பற்றியும் பேசிய பேச்சுக்கள் அடங்கிய சி.டி. இன்று காலையில்தான் என்னிடம் கிடைத்தது. அதை போட்டுப் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் கொதித்துப்போவார்கள். நேரம் வரட்டும் அதை போட்டு காட்டுகிறேன்
என்னுடைய பேச்சுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வலியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கருணாநிதி, திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை எதுவும் கூறாதது ஏன் என்று தெரிவிக்க வேண்டும். ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுபோன்ற பிரச்சார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும்.
திருப்பிப் பேச நான் தயார்!
நான் ஏதாவது பேசினால் உடனே டெல்லிக்கு கோள் சொல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எங்கள் தலைவர்களை தாக்கிப் பேசினால் திருப்பிப் பேசவும் நான் தயார்.
காங்கிரஸ்காரர்கள் நாம் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். அவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பது தவறு. 1967க்கு பிறகு நாம் பதவியில் இல்லாமல் இருக்கிறோம் ஆனால் நாங்கள் எழுச்சியோடு இருக்கிறோம். மற்றவர்கள் பதவி இல்லாமல் இருந்தால் அவர்கள் நிலை என்ன என்பது எமர்ஜென்சி காலத்தில் தெரிந்தது. கரை வேட்டிகள் காணாமல் போய்விட்டன.
சலாம் போட்டு ஏமாற்றக் முடியாது
மேலே இருப்பவர்களுக்கு சலாம் போட்டுவிட்டு இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்களை ஏமாற்றி விடலாம். நாம் சுகமாக இருக்கலாம் என்று நினைத்தால் காங்கிரஸ்காரர்கள் ஏமாற மாட்டார்கள். மக்களும் ஏற்க மாட்டார்கள்.
காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் பயப்படாதவர்கள். எங்கள் சின்னம் கை. கரை படாத கைக்கு நாங்கள் சொந்தக்காரர்கள் காமராஜரைப் பார்த்து ஆங்கிலம் தெரியாதவர், இங்கிலாந்து ராணியோடு பேச முடியாதவர் என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். இன்று அவர்களின் நிலைமை நாட்டு மக்களுக்கு தெரியும் எனவே நல்லவர்களை கிண்டல் செய்யாதீர்கள்.
லாலுவைப் போல ஆட்சி என்று சொல்லுங்கள்
காமராஜரைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லாதீர்கள். அதை எப்படி ஏற்க முடியும். லல்லுவைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லுங்கள் அது சரியாக இருக்கும். காமராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டும்தான் தர முடியும்.
டீசல் மீதான வரியை ஏன் குறைக்கவில்லை?
மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியது. உடனே டெல்லி முதல்வர் டீசல் மீதான வரியை குறைத்தார். இதனால் அங்கு டீசல் விலை உயரவில்லை. அதை முன் உதாரணமாக இங்கும் கடை பிடித்தால் என்ன?
மின் கட்டணத்தை உயர்த்தியது என்ன நியாயம்?
மின்சாரத்தை ஒழுங்காக கொடுக்காமல் கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையில் நியாயம். இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் உங்கள் ஆட்சியில் எங்களுக்கும் பங்கு உண்டு. தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். நாடு நன்றாக இருக்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வரவேண்டும்.
கூட்டணி பற்றி மேலிடம் முடிவு செய்யும். இன்று தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். நாளை, நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பது எப்படி தெரியும்?. அதை சொல்வதற்கு நான் ஜோசியனும் அல்ல. இப்போது சில பிரச்சினைகளை சொல்வதற்கு காரணம் ஆட்சியில் இருக்கும் நல்லவர்களுக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான்.
இனி இது போன்ற காங்கிரஸ் பொதுக் கூட்டம் அதிகமாக நடக்கும். மக்களுக்கு சில உண்மைகளை எடுத்துச் சொல்லும் காலம் வந்து விட்டது என்றார் இளங்கோவன்.
நல்லவர்கள் எண்ணம் அதுதான்
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே? என்று கேட்டபோது,
ராமதாஸ் சில நேரங்களில் சில நல்ல கருத்துக்களை சொல்வார். அப்படித்தான் இதையும் சொல்லியிருப்பார். நல்லவர்கள் எண்ணமும் அதுவாகத்தான் உள்ளது என்றார்.
தங்கபாலு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்!
அதிகம் பேசக் கூடாது என்று தங்கபாலு எச்சரித்துள்ளார என்ற கேள்விக்கு, நான் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டணியை வலுப்படுத்தவே சில கருத்துக்களை கூறுகிறேன். தங்கபாலு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் காலத்தில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது இல்லை. மாநில செயற்குழு கூட்டம் நடந்தது இல்லை. காங்கிரஸ் தொண்டர்களுக்கு குறைகளை சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னிடத்தில் அவர்கள் சொல்லும் குறைகளை இதுபோன்ற கூட்டங்கள் வாயிலாக நான் தெரியப்படுத்துகிறேன் அவ்வளவுதான் என்றார் இளங்கோவன்.
'கன்ட்ரோல்' எங்கே...?
இளங்கோவன் சற்றும் தொய்வில்லாமல் திமுகவை கடுமையாக வாரி வருவது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படும் வகையில், விமர்சித்துப் பேசக் கூடாது என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எச்சரிக்கை விடுத்தும் கூட தொடர்ந்து இளங்கோவன் அதேபோல பேசி வருவதால் அவரது பேச்சைக் கன்ட்ரோல் செய்யும் அதிகாரம் தற்போது வேறு 'எங்கோ' இருப்பதாகவும் திமுகவினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications