இலங்கை போர் குற்றம்-விசாரிக்க கோரும் யுஎஸ் எம்பிக்கள்
வாஷிங்டன்: இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த 57 எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே பல வருடங்களாக கடும் யுத்தம் நடைபெற்று வந்தது. அந்த யுத்தம் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதியன்று முடிவுக்கு வந்தது.
இறுதிக் கட்ட போரின் போது, பல்வேறு சர்வதேச விதிகளை இலங்கை அரசு மீறிச் செயல்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் இலங்கை மீது குற்றம் சாட்டியுள்ளன.
இந் நிலையில், இலங்கைப் போர் குற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒரு குழுவை நியமித்துள்ளார்.
இந்த நியமனத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. அமைத்துள்ள 3 பேர் கொண்டக் குழு இலங்கை வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த போர் குற்ற நிகழ்வுகள் குறித்து தனியாக சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகத்திற்கு 57 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications