இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யலாம்-அமெரிக்க நிபுணர்கள்
வாஷிங்டன்: இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குழுவும் கலந்து கொண்டது. அப்போது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், இந்திய குழுவுக்கும் கடும் வாதம் மூண்டது.
இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம் திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பி.வி.இந்திரேசன் ஆகியோர் கூறுகையில், இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாக பாதுகாப்பு வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த குழுவில், பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஸ் பெனலா (மைக்ரோசாப்ட்), மாட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி-டி ஷானான் லேப்ஸ்), ருஸ்ஸல் பிங்க் (மேரிலான்ட் பல்கலைக்கழகம்), இயான் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (கிளியல் பேலட் குரூப்), நீல் மெக்பிரன்னட் (எலக்ஷன் ஆடிட்ஸ்) ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications