லஞ்சம் வாங்காமல் சாதுரியமாக வாக்களியுங்கள்-மக்களுக்கு ஜெ. அழைப்பு

விலைவாசி உயர்வு, விவசாயிகள், மீனவர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்தும், மணல் கொள்ளையால் நீராதாரம் பாதிக்கப்படுவதை கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில், திருச்சி, பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து திரண்டு வந்த பல லட்சம் பேரால் திருச்சி நகரம் ஸ்தம்பித்துப் போனது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார் ஜெயலலிதா. அவருக்கு அங்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து நேராக மேடைக்கு வந்தார் ஜெயலலிதா. அவர் வந்த வழியெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வரவேற்றதால், அவரது கார் வேகமாக வர முடியாமல் ஊர்ந்து ஊர்ந்தே வந்தன.
ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேசியவற்றிலிருந்து சில பகுதிகள்...
வாழ்நாளில் காணாத கூட்டம்
நான் பொது வாழ்க்கைக்கு வந்து 28 ஆண்டுகளாகி விட்டது. இந்த ஆண்டுகளில் நான் போகாத ஊரில்லை, பேசாத கூட்டம் இல்லை. ஆனால், இன்று காண்பது போன்ற கூட்டத்தை நான் எனது வாழ்நாளில் கண்டதில்லை. இங்கே திருச்சி விமான நிலையத்தில் இறங்கி நாலரை கிலோமீட்டர் தூரம் இந்த இடத்திற்கு வரும் வரை வெள்ளமென மடை திறந்த கடலென திரண்டிருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன், இதுபோன்ற கூட்டத்தை நான் எனது வாழ்க்கையில் கண்டதில்லை. ஆகவே இன்று நாம் அனைவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டின் தலைவிதியையே மாற்றப் போகிற கூட்டத்தில், திருப்பு முனை கூட்டத்தில் பங்கேற்றதில் அனைவரும் பெருமை கொள்ளலாம்.
திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ளது. திருச்சி மாநிலத்தின் முக்கிய மையம். திருச்சியுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது குடும்பத்தினரின் பூர்வீகம் ஸ்ரீரங்கம் ஆகும். திருச்சி வருவது சொந்த ஊருக்கு வரும் உணர்ச்சியை எனக்குத் தருகிறது. சொந்த ஊரில் இவ்வளவு பெரிய கூட்டத்தில் உரையாற்றுவது அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.
தேர்தல் ஆண்டில் இருக்கிறோம்
ஆட்சிப் பொறுப்பை மைனாரிட்டி திமுக பொறுப்பேற்று 4 ஆண்டுளாகி விட்டது. நாம் தேர்தல் ஆண்டில் இருக்கிறோம். 9 மாதங்களில் தேர்தலை சந்திக்கவுள்ளது தமிழகம். அடுத்த அரசை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. குடிமக்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் வாக்களிப்பு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். வாக்களி்ப்பதன் மூலம் தேசத்தின் விதியை மாற்றலாம். மாநிலத்தின் விதியை மாற்றலாம். உங்களுடைய சொந்த விதியையும் மாற்றியமைக்கலாம். வாக்கு மூலம் மோசமான அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றலாம்.
புத்திசாலித்தனமாக வாக்களிப்பதன் மூலம் ஒரு நல்ல அரசாங்கத்தை அமர்த்தலாம். எனவே வாக்களியுங்கள், சாதுரியமாக வாக்களியுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வலுவான, ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை அமைக்கக் கூடிய பொறுப்பான அரசை அமர்த்துங்கள்.
கால்குலேட்டருக்கு கிறுக்குப் பிடிக்கும்
தமிழ்நாடு, செழிப்பான மாநிலம், இயற்கை வளம் நிறைந்த மாநிலம், மனித ஆற்றல் நிறைந்த, அறிவாற்றல் நிறைந்த மாநிலம். ஆனால் மக்கள் மட்டும் ஏழைகள், முதல்வரோ, உலகப் பணக்காரர்களில் ஒருவர். அவரது சொத்து மதிப்பை கணக்கிட முயற்சித்தால் கால்குலேட்டருக்கும் கிறுக்கு பிடித்து விடும்.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சொந்த நலனுக்காக மக்களை அடிமட்டத்திலிரு்து ஒரு குடும்பம் சுரண்டிக் கொண்டிருக்கிறது. உங்களது பாக்கெட்டுகள் காலியாக உள்ளன. வயிறுகள் காய்கின்றன. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற போதுமான பணம் இல்லை. ஏனென்றால் தேவையான பொருட்கள் அனைத்தும் சக்திக்கு மீறி ஏறி விட்டன.
மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார் கருணாநிதி
விலைவாசிகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. கட்டுப்படுத்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை. கேள்வி கேட்டால் மத்திய அரசின் மீது பழியை சுமத்துகிறார் கருணாநிதி. விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது திமுக. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. விலைவாசி பிரச்சினை என்பது உங்களுக்குத்தான், அவர்களுக்கு இல்லை.
மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்துகிறீர்களே என்று கேட்டால், உயர்த்தப்படவில்லை என்கிறார் கருணாநிதி, அதையும் மீறி போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தைப் பாருங்கள் என்கிறார் அதை விடக் குறைவு என்கிறார். மின் கட்டணத்தை உயர்த்துகிறீர்களே என்று கேட்டால் ஆந்திராவை விடக் குறைவு என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர நீங்களும் காரணம் என்று கேட்டால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்கிறார். விலைவாசி உயர்வு குறித்துக் கேட்டால் மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார். வாய்ஜாலத்தால் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் கருணாநிதி. அவரது ஏமாற்றுவித்தையை நினைக்கும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
விசிறி வியாபாரி கதை
ஒரு விசிறி வியாபாரி இருந்தார். நூறாண்டு காலம் உழைக்கும், 10 ரூபாய்தான் என்று கூவி கூவி விற்று வந்தார் விசிறிகளை. அதை நம்பி ஏழை எளிய மக்கள் தங்களிடமிருந்த காசைக் கொடுத்து அவர் விற்ற விசிறிகளை வாங்க ஆரம்பித்தனர். இந்த செய்தி அரசவைக்கு எட்டியது. மக்களை ஏமாற்றி விசிறி விற்பதை கேட்ட மன்னன் காவலர்களை அனுப்பி வியாபாரியை விசாரணைக்கு அழைத்து வரச் சொன்னான். வியாபாரி அழைத்து வரப்பட்டதும், அதுகுறித்து மன்னர் கேட்டார். அதற்கு வியாபாரி கொஞ்சமும் அச்சப்படாமல், உங்களுக்கும் இரண்டு விசிறிகளை தருகிறேன், வாங்கிக் கொள்ளுங்கள் என்றான். மன்னருக்கு சந்தேகம் வந்து விட்டது.
ஒரு வேளை உண்மையாகவே இந்த விசிறிகள் 100 ஆண்டு உழைக்குமோ என்று நினைத்து 20 ரூபாய் கொடுத்து விசிறி வாங்கினார். அதேசமயத்தில், 100 வருடத்திற்கு முன்பு விசிறி கிழிந்தால் உனது தலையை எடுப்பேன் என வியாபாரிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் அந்தப்புரத்தில் அமர்ந்திருந்தபோது புழக்கமாக இருக்கிறதே என்று விசிறியை எடுத்து வீசினார் மன்னர். அப்போது விசிறி படாரென்று கிழிந்து விட்டது. மன்னருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வீரர்களை அனுப்பி அந்த வியாபாரியை அழைத்து வருமாறு உத்தரவு போட்டார். மறு நாள் விசிறி வியாபாரி அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டான். விசிறி கிழிந்து போனதைக் காட்டி நேற்று நீதானே எனக்கு விற்றாய் என்றார். ஆம் என்று தலையாட்டினான் வியாபாரி. நூறு ஆண்டு காலம் இது உழைக்கும் என்று சொன்னது நீதானே என்றார். எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டான் வியாபாரி. அப்போது மன்னர், நீ கொடுத்த விசிறி கிழிந்து விட்டது. உனது தலைமையை வெட்ட உத்தரவிடப் போகிறேன் என்றார் மன்னர்.
ஆனால் சற்றும் சளைக்காத வியாபாரி, தாராளமாக வெட்டுங்கள், அதற்கு முன்பு என் விசிறியை எப்படி பயன்படுத்தினேன் என்பதை செய்து காட்டுங்கள் என்றான் வியாபாரி. அப்போது முகத்திற்கு முன்பு விசிறியை வைத்து எல்லோரும் ஆட்டுவது போல ஆட்டினேன் என்றார் மன்னர். அதைக் கேட்ட வியாபாரி, ஐயோ மன்னா தவறிழைத்து விட்டீர்கள். இப்படி பயன்படுத்தக் கூடாது. விசிறியை முகத்திற்கு முன்பு வைத்துக் கொண்டு மூஞ்சியை மட்டும்தான் ஆட்ட வேண்டுமே தவிர விசிறியை ஆட்டக்கூடாது என்றான். என் பொருள் தரமானது. நீங்கள் பயன்படுத்திய விதம்தான் தவறு என்றான். அந்த விசிறி வியாபாரிதான் இன்று கருணாநிதியாக, முதலமைச்சராக இருக்கிறார்.
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி
நெற்றி வியர்வையை நிலத்தில் வடித்து ஒப்பற்ற தொழில் செய்பவர்கள் விவசாயிகள். இன்று தமிழக விவசாய நிலங்கள தார் பாலைவனமாக உள்ளது. திருவாரூரில் பிறந்த கருணாநிதி, பிறந்த மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்தவர். காவிரியை தவிர்த்து விட்டு தமிழக விவசாயத்தைப் பார்க்க முடியாது. தமிழகத்தின் விவசாய நிலங்களில், 85 சதவீதம் காவிரி பாசனப் பகுதியில் அமைந்துள்ளது. வளர்ந்த நாகரீகத்தின் சின்னமாக வடக்கே கங்கை திகழ்வது போல தமிழர் தம் நாகரீகமாக காவிரி விளங்குகிறது. வாழ்வுக்கும், வளத்திற்கும் காரணமான அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கியிருப்பவர் கருணாநிதி.
கருணாநிதி குடும்பத்தின் வணிக சாம்ராஜ்ய்ம் கர்நாடகத்தில் உள்ளது. இதனால்தான் கர்நாடக அரசை விரோதித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. வாக்களித்த தமிழக மக்களை, விவசாயிகள் உரிமைகளை தாரை வார்க்கப்படுவது குறித்து அவருக்குத் துளியும் கவலை இல்லை.
உதயா டிவியை ஏன் தாக்கவில்லை?
காவிரியில் நமக்குள்ள பங்கினை தமிழகம் தட்டிக் கேட்கும்போதெல்லாம் தமிழ் நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள், தமிழர்களுக்குச் சொந்தமான சிறிய வியாபார அலுவலகங்கள், தியேட்டர்களை தமிழ் நாளிதழ்களின் அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்த தாக்குதல்களின்போது கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் முரசொலி செல்வம் ஆகியோருக்கு சொந்தமான உதயா டிவி எப்போதாவது தாக்கப்பட்டதுண்டா. இல்லை, சன் குடும்பத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், பல்வேறு தொழில்கள், எஸ்டேட்டுகள், கட்டடங்கள் இத்தகைய தாக்குதலுக்கு ஆட்படக் கூடாது என்பதற்காககத்தான் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்த மறுக்கிறார் கருணாநிதி.
தமிழகத்தில் முற்றிலும் விவசாயம் நின்று விட்டாலும் கூட கருணாநிதிக்கு கவலை இல்லை. தன் குடும்பச் சொத்துக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அவரது இந்த தொடர் துரோகம் காரணமாக நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை பாலைவனமாக மாறியுள்ளது. விவசாயிகள் செய்வதறியாது விரக்தியில் உள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் இல்லை, நிலத்தடி நீரும் இறங்கி விட்டது. மின்வெட்டு காரணமாக பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை.
உரம், விதை, பூச்சி கொல்லி மருந்து மானிய விலையில் கிடைப்பதில்லை. வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பயிர்க்கடன் பெற முடியவில்லை. இவ்வளவையும் மீறி விவசாயம் செய்தாலும் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. வேளாண் தொழில் லாபமற்ற தொழிலாக விளங்குகிறது.
வேளாண் உற்பத்தி குறைந்து விட்டது
2006ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. நடப்பாண்டில் 53,000 ஹெக்டேர் மட்டுமே குறுவை சாகுபடி நடந்துள்ளது. இதில் டெல்டா பகுதிகளில் 16,000 ஹெக்டேரில் மட்டுமே விவசாயம் நடந்துள்ளது. இதற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததே காரணம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் திறந்து விடாததுதான். கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்காததுதான் காரணம்.
கருணாநிதியின் அக்கறையின்மையைப் பாருங்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அவருக்கு அந்த நினைப்பே இல்லை. பலமுறை பெங்களூருக்குச் சென்று செல்வியின் பிரமாண்ட பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநில முதலமைச்சரை சந்தித்துள்ளார். அப்போதெல்லாம் இருவரும் என்ன பேசிக் கொண்டார்களோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம். பெங்களூர் பயணத்தின்போது ஒருமுறையாவது தமிழகத்திற்கு தர வண்டிய காவிரி நீரை திறந்து விடுங்கள் என்று கேட்டதுண்டா. அந்த எண்ணமே தோன்றவில்லையே. ஒரு கடிதத்தையாவது எழுதினாரா, அதைக் கூட செய்யவில்லையே.
திருச்சியில் எனது விவசாயிகள் பிரச்சினையை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவித்தவுடன் அதே நாளில் கர்நாடக முதல்வருக்கு திடீரென காவிரி நீரை திறந்து விடுமாறு கடிதம் எழுதுகிறார்.
ஜூலை 13ம் தேதி கோவையில் எனது தலைமையி பிரமாண்ட கூட்டம் நடந்தது. அங்கே திரண்ட மக்கள் வெள்ளம் கருணாநிதிக்கு கிலியை உண்டாக்கி விட்டது, நடுக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த தேர்தலில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும் என்ற மரண பயம் வந்து விட்டது. ஜூலை 21ம் தேதி டெல்டா விவசாயிகளுக்காக ஆகஸ்ட் மாதத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தேன். அதே நாளில் அதுவரை இல்லாத அக்கறை வந்து காவிரியில் தண்ணீரை திறந்து விடுங்கள் என்று கர்நாடக முதல்வருக்கு அவசரம் அவசரமாக கடிதம் அனுப்புகிறார் கருணாநிதி. நான் அறிவித்த பிறகுதான், சில நாட்களுக்கு முன்புதான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உணவுப் பஞ்சம் ஏற்படும்
கருணாநிதி ஆட்சி இனியும் நீடித்தால், தமிழகத்தில் உணவுப் பஞ்சம் வரும். 3 போக விவசாயம் செய்த நிலை மாறி ஒரு போகத்திற்குக் கூட இன்று வழியில்லை. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஏழை, எளிய விவசாயிகளின் நிலத்த அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி காசு பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் நிலை இதை விட மோசம். கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை அழித்தவர் கருணாநிதி. இலங்கை கடற்படையினரால் கண்மூடித்தனமாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சுடடுக் கொல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கூடுதலாக பணம் கிடைக்கும் என்ற பேராசை காரணமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதால் இத்தகைய நிலை ஏற்படுவதாகப் பேசி மீனவர்களை கேவலப்படுத்துகிறார் கருணாநிதி. பேராசையைப் பர்றி கருணாநிதி பேசலாமா.
கருணாநிதிதான் பேராசை பிடித்தவர்
தமிழ்நாட்டு மக்கள் படிக்க வேண்டும் என்றால் தனது குடும்பப் பத்திரிக்கையைப் படிக்க வேண்டும். பார்க்க வேண்டும் என்றால் குடும்பத் தொலைக்காட்சி, கேட்க வேண்டும் என்றால் கருணாநிதியின் புரியாத புலம்பல்களை கேட்க வேண்டும், ஓட்டுப் போட வேண்டும், தனக்கும், தனக்குப் பின்னால் மகனுக்கு, பேரனுக்கு என்று எல்லையே இல்லாமல் பேராசை பிடித்து அலையும் கருணாநிதி மீனவர்களை பேராசை பிடித்தவர்கள் என்கிறார். இது அடுக்குமா.
இன்று பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களை விட கீழே போய் விட்டது தமிழக பொருளாதாரம். மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தோம். உபரி மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வந்தோம். அதிமுக ஆட்சியில் மின் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டன. தேசிய விருதுகள் பெறப்பட்டன. இன்று திமுக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று பெரும்பாலான மின்நிலையங்கள் பழுதடைந்து விட்டன. மின் உற்பத்தி குறைந்து விட்டது. மின்சாரத்திற்காக பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் பல மணி நேரம் இருளில்தான் உள்ளது.
இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களுடைய கையில்தான் உள்ளது. நீங்களே லஞ்சம் வாங்கும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள். வெறும் ஆயிரம் ரூபாயாக்கு உங்களது வாக்குகளை விற்று விடாதீர்கள். அதிமுகவுக்கு வாக்களிக்க இன்றே உறுதி ஏற்போம். தமிழ்நாட்டையும், தமிழ மக்களையும் காக்க உறுதி ஏற்போம் என்றார் ஜெயலலிதா.
கோவையை மிஞ்சிய பெரும் கூட்டம்
இன்று திருச்சியில்நடந்த கூட்டத்திற்கு பல லட்சம் பேர் திரண்டு வந்ததால் திருச்சி நகரமே அதிமுக மயமாக மாறிப் போனது. கோவையில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை விட அதிக அளவிலான கூட்டத்தை இன்று திருச்சி கண்டது.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் மயமாக மாறியிருந்ததால் நகரின் இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.
ஆகஸ்ட் 14 ஏன்?
முதலில் அதிமுக போராட்டம் ஆகஸ்ட் 24ம் தேதிதான் நடப்பதாக இருந்தது. ஆனால்,ஆகஸ்ட் 24ம் தேதி ஆவணி அவிட்டமாகும். அன்றைய தினம் பிராமண சமுதாயத்தினர் பூணூல் மாற்றுவார்கள். புதிய பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் அன்றுதான் நடைபெறும். இதை பூணூல் கல்யாணம் என்றும் அழைப்பார்கள்.
இது திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். எனவே அன்றைய தினம் திருச்சியிலும், ஸ்ரீரங்கத்திலும் மக்கள் கூட்டம் அலை மோதும். இதை அம்மாவின் காதுகளுக்குக் கொண்டு சென்ற அதிமுகவினர், நாம், அன்றைய தினம் கூட்டம் நடத்தினால் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகஸ்ட் 24ம் தேதிக்குப் பதில் 14ம் தேதியே நடத்த முடிவெடுத்தாராம் 'அம்மா'.
இன்றைய நாள் பெருமாளுக்கு உரியது என்பதால் இதுவும் விசேஷமான தினம்தான். எனவே சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம் என்பதால் இன்றைய தினம் ரங்கநாதரை தரிசித்து விட்டு எதைச் செய்தாலும் அதன் அருள் பூரணமாக கிடைக்கும் என்பதால் இன்றைய தினத்தை தேர்வு செய்தாராம் ஜெயலலிதா. அதுவும் தனது ஜோதிடரின் அறிவுரையின் பேரில்.
பிரியாணி பிளஸ் ரூ. 200 'கைக் காசு'!
ஆர்பாட்டத்திற்கு வந்தவர்களுக்கு பிரியாணி மற்றும் ஒரு நபருக்கு ரூ 100 முதல் ரூ 200 வரை செலவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளும் திமுகவுக்கு எதிரான மாநாடு என்பதால் தனியார் பஸ் முதலாளிகள் இந்த மாநாட்டிற்கு பஸ்கள் தர மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள் மகேந்திரா மற்றும் டெம்போ டிராவலர் போன்ற பல்வேறு வாகனங்களில் சென்று கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications