எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சேலம்: அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், மு.க.அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இங்கு வந்தவர்கள் திருமண விழாவை விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி இன்று காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலம் வந்தார் முதல்வர் கருணாநிதி. ரயில் நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி சென்ற முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

பின்னர் உத்தமசோழபுரம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு கவுதமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடக்கமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், முருகனுக்கு வீரபாகு. எனக்கு வீரபாண்டி ஆறுமுகம் என திமுக தலைவர் சொல்லுவார். கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை போல, எனக்கு வீரபாண்டி என்றும் சொல்லுவார்.

மிசா காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தோம். எனது தாயார் மீது சாரய வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அப்போது கூட எதற்கும் வருத்தப்படவில்லை. தலைவரை பார்க்க முடியவில்லையே என்றுதான் கவலையடைந்தேன்.

பெரியார், அண்ணா வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றி வரும் முதல்வர் எனது இல்ல திருமணத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

மாநாடு போல இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்கு பேசிய தம்பி வீரபாண்டி ஆறுமுகம் நன்றி கூறினார். எனக்கு நன்றி கூற நீ யார்?, நானே இந்த வீட்டிற்கு சொந்தக்காரனாக இருக்கும்போது நீ நன்றி கூறுவதா?, நன்றி கூறுவது ஒரு சம்பரதாயம். அந்த வகையில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் நன்றி கூறியிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எத்தனை இன்னல்கள் பல தியாகங்கள் வந்திட்ட அவர் இன்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இருக்கிறார். திராவிட இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் கல்லடிபட்டோ, சொல்லடிபட்டோ, அராஜகத்தால் தாக்கப்பட்டோ காயம்பட்டவர்கள்.

ஆனால், அவர்கள் சுய மரியாதை உணர்வுடனும், திராவிட இயக்க உணர்வுடனும், இருந்து பல்வேறு போராட்டங்களை கடந்து வந்து, அந்த போராட்டங்கள் தூசு என்று கூறும் அளவுக்கு பயிற்சி பெற்றவர்கள். இப்படி எவ்வளவோ நெருக்கடி காலத்திலும், நெருக்கடி நேரத்திலும் பயிற்சி பெற்றவர்தான் தம்பி வீரபாண்டி ஆறுமுகம்.

எனது உடல் நிலை கருதி காரில் வருவேனா, ரயிலில் வருவேனா என சொல்லமுடியாத நிலையில் மணமக்களை வாழ்த்த என் உடல்நிலை கருதாமல் வந்து வாழ்த்தியிருக்கிறேன். இந்த விழாவில் நான் வந்து கலந்து கொண்டதற்கு நன்றி சொல்வது பெரிய விஷயமல்ல.

ரயிலில் இருந்த இறங்கியபோது என்னை தாங்கி பிடித்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், எனது துணைவியாருக்கும், தோழர்களுக்கும் என் நிலை தெரியும். இதையெல்லாம் உங்களை பார்த்ததில் அது தெரியாமல் அது மகிழ்ச்சியாக மாறியிருக்கிறது. அதுதான் ஊட்டி வளர்ந்த உணர்வு.

இங்கு அமைச்சர் பன்னீர்செல்வம், மு.க. அழகிரி ஆகியோர் பேசியது என்னை பழைய நினைவுக்கு எங்கோ கொண்டு சென்றுள்ளது. நான் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் நினைவுதான் அப்போது வந்தது.

நான் மேடையில் ஆவேசமாக பேசுகிறேன் என்றால் என் மனதில் அழகிரி புகுந்து இருக்கிறார் என்று அர்த்தம். வாதங்கள் அடுக்கடுக்காக வைத்து பேசினால் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என் உள்ளத்தில் புகுந்திருக்கிறார் என்று அர்த்தம்.

அத்தகையாளர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ள நான் தஞ்சையில் நடந்த தூக்கு மேடை நாடகத்தின்போது எம்.ஆர். ராதா அவர்கள் தெரிவிக்க, தளபதி அழகரி சாமி, எனக்கு கலைஞர் பட்டத்தை தந்தார்.

அந்த அழகிரி இப்படித்தான் பேசுவார். பன்னீர்செல்வம் சூடாக பதில் சொல்வார். ஒரு முறை ராஜாஜி அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, 2 பேர் எதிர்க்கிறார்கள் என சட்டசபையில் கூறினார்.

அப்போது பன்னீர் செல்வம் எழுந்து ஒருவர் இந்தியை கொண்டுவர முயற்சிக்கிறார். 2 பேர் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று கூறி இந்தியை கொண்டுவராதீர்கள் என்று தெரிவித்தார்.
அவர் அத்தகைய அறிவாண்மை உள்ளவர்.

அந்த பெயரை வைத்துக் கொண்டு நமது அமைச்சர் பன்னீர்செல்வம் இங்கே பேசும்போது யார்யாருக்கோ சவால் விட்டார். திருமண விழாவில் அது தேவையில்லை. நல்ல நேரத்தில் கெட்டவர்களை பற்றி பேசக்கூடாது, சிந்திக்க கூடாது.

மணக்கோலத்தில் மணமக்கள் அமர்ந்து உள்ள நிலையில் மகன் வீட்டார் மகிழ்ச்சியாக உள்ள நிலையில் கெட்டபெயர்களை உச்சரிப்பது நல்லதல்ல. இந்த இயக்கத்தின் லட்சியத்தை போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இளைஞர்களின் கையில் உள்ளது. கொள்கைகளையும், லட்சியங்களையும், பாதுகாக்க வேண்டும்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் திருமண விழாவைவிட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள்.

நாம் வழிவழியே காப்பாற்றி வந்த நமது கலை, வரலாறு, போற்றி பாதுகாக்க வேண்டும். எந்த காரியமாக இருந்தாலும் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். இதைத்தான் பெரியாரிடம் பயின்றேன்.

நான் சிறுவனாக இருக்கும்போது சங்கீதம் கற்றுக் கொள்ள சென்றேன். சங்கீதம் கற்றுக் கொண்டு இருந்தால் வித்வானவாகி இருப்பேன். சுயமரியாதையுடன் இருந்ததால் ஆகவில்லை. சங்கீதம் கற்றபோது தர்மகர்த்தா வந்தார். எனக்கு பாடல் சொல்லி கொடுத்தவர் எழுந்து நின்று அவரை வரவேற்று துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டார். என்னையும் துண்ணை இடுப்பில் கட்ட சொன்னார்.

அந்த துண்டு நான் வாங்கியது. நான் ஏன் இடுப்பில் கட்டவேண்டும் என சுயமரியாதையோடு கேட்டு கட்டவில்லை. அந்த சுயமரியாதையினால் நான் இன்று கலைஞராக தமிழக முதல்வராக இருக்கிறேன்.

எந்தவித தனி மனிதனும் தனக்கு தானே சுயமரியாதையோடு இருக்கிறோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும், அப்போது பதில் தானாக கிடைக்கும். அந்த சுயமரியாதையை இளைஞர்களிடம் பெரியார் பரப்பினார்.

வரும் வழி முழுவதும் திமுக தோழர்கள் எனது உருவம் பொறித்த பேனர்களை வைத்திருந்தனர். அதில் என் கட்டைவிரல் உயர்த்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. எதிரிகளை வீழ்த்த தம்பிகள் இருக்கிறார்கள். நமக்கு எப்போதும் வெற்றிகளே குவியும்.

பெரியார், அண்ணா ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை உணர்வை எந்த சூழ்நிலையிலும் திராவிட இயக்கத்தினர் மறந்துவிடக் கூடாது என்றார்.

(சமீபத்தில் மேட்டூரில் குடிநீர் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், இந்தத் திட்டம் நிறைவேறும்போது தமிழகத்தின் முதல்வராகத் தலைவர் கருணாநிதி தான் இருப்பார். ஆனால், நான் அப்போது அமைச்சராக இல்லாவிட்டால்கூட நிச்சயமாக திமுகவின் ஒரு தொண்டனாக, சாதாரண ஆறுமுகமாக அந்த விழாவில் கலந்துகொள்வேன் என்று பேசியிருந்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலி்ல் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வசதியாக வீரபாண்டியாரை ஒதுங்குமாறு துணை முதல்வர் ஸ்டாலினும் கட்சித் தலைமையும் சொல்லக் கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமை சொல்லி ஒதுங்குவதைவிட, தானே ஒதுங்கும் முடிவுக்கு வீரபாண்டியார் வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் தான் இன்றைய திருமண விழாவில் நன்றி சொல்லி என்னைப் பிரிக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியதாகக் கருதப்படுகிறது.)

முன்னதாக இந்தத் திருமண விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசுகையில்,

ஜெயலலிதா எல்லா இடங்களிலும் திமுக தலைவரை தரக்குறைவாக பேசுகிறார். திமுக மைனாரிட்டி அரசு என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா எப்போது மேஜர் ஆனார். பராசத்தி, தாயே, செல்வி ஜெயலலிதா என அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர்.

செல்வி ஜெயலலிதா என்றால், கன்னி தாய் என பெயர் வைக்கிறார்களா? ஹார்லிக்ஸ் விவகாரத்தில் என் மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் இனி எதையும் பேச வேண்டாம் என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக தலைவரை தவறாக சித்திரத்து பேசுகிறார் ஜெயலலிதா. திமுக தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.

இன்று மாலை சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், செவிலியர் கல்லூரி, புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா, 921 குடியிருப்புகளுக்கு காவிரி தனிக்கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இரவில் சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலத்தில் திமுகவினர் பெருமளவில் குவிந்துள்ளனர். சேலம் முழுவதும் திமுக மயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் என அமர்க்களமாக உள்ளது.

இந்த கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டி முதல்வருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம் என ஏற்கனவே வீரபாண்டியார் கூறியுள்ளார். அதற்கேற்ப ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக உள்ளன.

இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 11.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்படுகிறார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+