10 மாதமாக 'கணவனாக' நடித்த பெண்: போதையில் குட்டு அம்பலம்-மனைவி அதிர்ச்சி!
கொழும்பு: பத்து மாதமாக கணவர் போல நடித்து ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ளார் இன்னொரு பெண். தனது கணவர் உண்மையில் ஆண் அல்ல, பெண் என்பதை அறிந்து அந்த மனைவி பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இந்த அலங்கோலம் நடந்தது இலங்கையில். இலங்கையின் மாத்தரா பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண்ணுக்கும், 30 வயதான ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்திற்குப் பெண்ணின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவர் கல்யாணம் செய்து கொண்டார்.
கல்யாணம் முடிந்த இத்தனை காலமாகிய நிலையில் சமீபத்தில் அப்பெண்ணின் கணவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் லுங்கி கட்டியிருந்தார். போதையில் லுங்கி அவிழவே, அதிர்ச்சி அடைந்தார் அவரது மனைவி. லுங்கி அவிழ்ந்து போனதற்காக அல்ல- அவர் கண்ட காட்சியைப் பார்த்து.
காரணம், அவரது கணவர் ஒரு பெண் என்பது அப்போதுதான் அந்த அப்பாவி மனைவிக்குத் தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கந்தரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கணவர் ஒரு பெண் என்பதை இத்தனை காலமாக குடும்பம் நடத்திய மனைவியால் கண்டுபிடிக்க முடியாமல் போனது போலீஸாரை பெரும் குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், தன்னை ஒரு நாள் கூட தனது கணவர் நெருங்கவே இல்லை என்றும், தான் நெருங்கினால் கூட புத்திசாலித்தனமாக விலகிப் போய் வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது கணவர் போல வேடம் போட்டு பத்து மாதங்களாக ஏமாற்றி வந்த அந்த பெண் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications