தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.
இதுதொடர்பாக 31 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை அதிமுக அரசு இழுத்தடித்தது. வழக்கில் தொடர்புடைய அதிமுகவினரை காக்க, பலியான மாணவிகளின் குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்களில் அதிமுக ஆட்சி ஈடுபட்டது.
மேலும் வழக்கை நடத்த போலீஸாரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது.
வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்பட 123 பேர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர்.
எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் தர்மபுரி நகர அதிமுக செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் 25 அதிமுகவினருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு தலா 7 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து 2 பேர் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஒருவர் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.
இந்த தண்டனைகளை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.
மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.
திட்டமிட்டு எரிக்கப்பட்ட பேருந்து-நீதிபதிகள்:
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்தப் பேருந்து திட்டமிட்டே எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்துக்கு எதிரான காட்டுமிரண்டித்தனமான கொடூர செயல். இதுபோன்ற செயல்கள் இனி நடக்கவே கூடாது.
தங்களது சுய லாபத்துக்காக அப்பாவி மாணவிகளை படுகொலை செய்தது கொடூரமானது. இந்த வழக்கில் ஏற்கனவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயமானதே என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications