3 அதிமுகவினரின் கருணை மனுக்களையும் ஏற்கக் கூடாது-ஹேமலதாவின் தாயார் கோரிக்கை

சென்னை, மாடம்பாக்கம், பத்மாவதி நகரில் வசித்து வரும் கேசவசந்திரன்-காசியம்மாள் தம்பதியின் மகள்தான் ஹேமலதா. மகளைப் பறி கொடுத்த சோகத்திலும், அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வந்த கேசவ சந்திரன், கடந்த ஏப்ரல் மாதம்தான் மரணமடைந்தார்.
இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து காசியம்மாள் கூறுகையில்,
குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்காக 10 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினால் நிராகரிக்க வேண்டும். நிராகரிப்பார் என நம்புகிறோம்.
அவரும் பெண்தான். கொல்லப்பட்ட 3 பெண் குழந்தைகளையும் தன் குழந்தையாக நினைத்து ஜனாதிபதி கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்.
இது போன்று தண்டனை கொடுத்தால்தான் குற்றவாளிகளுக்கு 1 சதவீதமாவது பயம் இருக்கும். 10 ஆண்டுகளாக மன உளைச்சலில் என் குடும்பம் பாதிக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது என்றார் கண்ணீருடன்.
ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரி கூறுகையில், வழக்கில் காலதாமதம் ஏற்பட்டதால் அந்த மன உளைச்சலில்தான் என் தந்தை இறந்தார். இந்த தண்டனை மிகச் சரியான தண்டனை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications