அரசு நிதியுதவி கேட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஊனமுற்றோர் கலெக்டரிடம் மனு
நெல்லை: புளியங்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற 3 பேர் வாழ்க்கை நடத்த உதவிக் கரம் நீட்டக் கோரி நேற்று கண்ணீருடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
புளியங்குடி வல்லவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியமுத்தையா, சண்முகதாய் தம்பதியினருக்கு 5 குழந்தைகள். தாய்மாமனான பெரிய முத்தையாவை திருமணம் செய்ததால் 5 குழந்தைகளில் 2 ஆண்குழந்தைகளான மாடசாமி, பேச்சிபாண்டி ஆகியோர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பெண் குழந்தைகளையும் பெரியமுத்தையா வறுமைக்கு இடையே திருமணம் செய்து கொடுத்தார்.
இதில் பெரிய முத்தையாவின் மகளான துரைச்சிக்கு பிறந்த பிரசாத் என்ற குழந்தையும் பிறந்த 3 மாதத்திலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் ஊனமுற்ற குடும்பம் என அவரது கணவர் துரைச்சியை வெறுத்து ஒதுக்கி விட்டார். கடைசியில் குழந்தையுடன் துரைச்சி தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டார்.
குடும்பத்தில் உழைக்க வேண்டியவர்கள் அனைவரும் ஊனமுற்று வீட்டில் முடங்கிக் கிடக்க தள்ளாத வயதிலும் பெரிய முத்தையா தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். தினமும் அரைவயிற்றுக் கஞ்சியுடன் இவர்கள் காலம் கடத்தி வருகின்றனர். வாழ வழி கேட்கும் இவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
இதனால் ஊனத்தை பொருட்படுத்தாமல் சகோதரி மற்றும் பிரசாத்துடன் பேச்சிபாண்டி நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்குமாறும், 5-ம் வகுப்பு படித்த தனது தகுதிக்கு ஏற்ப வேலை வழங்குமாறும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
பேச்சிபாண்டியின் குடும்பத்தில் நிலவும் சோகத்தை போக்க வழி பிறக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications