2 வழக்குகளிலிருந்து முத்துலட்சுமி விடுதலை-கர்நாடக கோர்ட் உத்தரவு

கடந்த 1992-ம் ஆண்டு மே மாதம், கர்நாடக மாநிலம் ராமபுரா போலீஸ் நிலையத்தை வீரப்பன் கும்பல் தாக்கியதில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், மீன்யம் என்ற இடத்தில் வீரப்பன் கும்பல் நடத்திய தாக்குதலில், போலீஸ் சூப்பிரண்டு அரிகிருஷ்ணா, சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமது உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, வீரப்பன், முத்துலட்சுமி மற்றும் கூட்டாளிகள் மீது கர்நாடக அதிரடிப்படை தடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மேட்டூர் அருகே முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்குகளில் கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், முத்துலட்சுமி விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 6 சாட்சிகள் சேர்க்கப்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் பிறழ் சாட்சியம் அடித்து விட்டதாகவும், 2 பேர் இறந்து விட்டதாகவும், ஒருவர் காணாமல் போய்விட்டதாகவும் அரசு வக்கீல் பசவராஜ் தெரிவித்தார்.
அதேசமயம், முத்துலட்சுமி மீது 22 போலீசாரை பலிகொண்ட பாலார் குண்டு வெடிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே முத்துலட்சுமியால் தற்போதைக்கு சிறையிலிருந்து விடுதலையாகி வர முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே, கடந்த 1991-ம் ஆண்டு, துணை வனச்சரகர் சீனிவாஸ் கொல்லப்பட்ட வழக்கில், கொள்ளேகால் விரைவு நீதிமன்றம் முத்துலட்சுமியை விடுதலை செய்தது நினைவிருக்கலாம். பாலார்குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் விடுதலையானால் கர்நாடகத்தில் அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்து.












Click it and Unblock the Notifications