2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: தாமஸூக்கு தொடர்பில்லை -அரசு
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) நியமிக்கப்பட்டுள்ள பி.ஜே. தாமஸுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிப்பது தொடர்பான மூவர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இப்பதவிக்கு மூன்று பேர் பரிசீலிக்கப்பட்டனர். இதில் சுஷ்மா ஸ்வராஜ் பரிந்துரைத்த நபரை மத்திய அரசு ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில் பிஜே தாமஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாமஸுக்கு தொடர்பிருப்பதாக சுஷ்மா குற்றம்சாட்டினார்.
இந்த பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னரே தாமஸ் குறித்து அனைத்து தகவல்களையும் அரசு திரட்டியுள்ளது. அப்போது அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. எனவே இப்போது பாஜக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராக தாமஸ் நியமிக்கப்பட்டபோது, 2-ஜி ஸ்பெக்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாயிருந்தன என அரசு தெரிவித்துள்ளது.
2 ஜி முறைகேடு 'ஒரு மெகா போஃபர்ஸ்' - பாஜக:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை பாஜக 'மெகா போஃபர்ஸ்' என்றும், ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸை நியமித்ததன் மூலம் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க அரசு முயற்சிக்கிறது என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், "மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவோ அடிக்கடி தான் பிரதமரின் வழிகாட்டுதலின்பேரில் செயல்படுவதாக மிகவும் பாதுகாப்பாக தப்பித்துக் கொள்கிறார். இதன் மூலம் இந்த ஊழலில் பிரதமருக்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்தி வருகிறார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை எனும்போது 3-ஜி ஒதுக்கீட்டுக்கு ஏலம் நடத்தியது ஏன்?" என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
பி.ஜே. தாமஸ் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியை சுஷ்மா ஸ்வராஜ் புறக்கணித்ததோடு, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை நேரில் சந்தித்து தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications