கூடுதல் எஸ்பி பதவி உயர்வுகள்-தடை கோரி 42 போலீஸ் அதிகாரிகள் வழக்கு
சென்னை: கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி உயர்வுக்கு தடை விதிக்கக் கோரி 42 போலீஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு உதவி கமிஷனர் சரவணன், வட பழனி உதவி கமிஷனர் மாடசாமி, மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 42 அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்,
நாங்கள் 1979ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்தோம். எங்களுக்கு சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக அந்த கல்லூரி எங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கியது. இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில்தான் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், 1985ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு தருகிறார்கள். இதன் அடிப்படையில்தான் கூடுதல் சூப்பிரண்டு பதவிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு ஆணை வெளியிட்டுள்ளது.
போலீஸ் பயிற்சி கல்லூரி மதிப்பெண்ணின்படிதான் இந்த பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 2007ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே தற்போது தமிழக அரசு மேற்கொண்டு வரும் துணை சூப்பிரண்டு பதவி உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.