அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட சரத்குமார் கோரிக்கை
சென்னை: அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவிவருகிறது. இதற்கான தடுப்பூசி போட்டுக்கொண்டால் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்றும், ஒரு ஆண்டுக்கு இந்த நோய் நெருங்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த தடுப்பூசி, தனியார் மருத்துவமனைகளில் ரூ.300, ரூ.200, ரூ.150 என்ற கட்டணங்களில் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
மக்களின் உயிருக்கு உலைவைக்கும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு வசதியாக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பன்றி காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடுவதற்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கான செலவை, அரசே ஏற்று பொதுமக்களுக்கு இலவசமாக, பன்றி காய்ச்சல் நோய் தடுப்பூசி போடவேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications