Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி வாரத்தில் 5 நாட்களும் பள்ளிக்குழந்தைளுக்கு சத்துணவுடன் முட்டை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இனி வாரத்தில் ஐந்து நாட்களும் சத்துணவுடன் முட்டை தரப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, அரசு பொது நூலக இயக்ககம் சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 2வது பெரிய நூலகமாக இது கருதப்படுகிறது.

இதனை நேற்றுமுதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அண்ணா 1948-ம் ஆண்டு வானொலியிலே பேசினார்கள். தலைப்பு "நூலகம்'' என்பதுதான். அப்போதெல்லாம் வானொலி ஒரு சாராருக்கே உரியது, ஒரு சாராருடைய விளம்பரத்திற்கே அது கருவியாக இருக்கக்கூடியது, என்ற நிலையில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த யாரையும் அழைத்துப் பேசச் சொல்வதும் இல்லை, அங்கே நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பதும் இல்லை.

1940 என்று கருதுகிறேன், அப்போது நான் "குண்டலகேசி'' இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்தேன். அது வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை, திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். ஆனால் வரும், வரும் என்று காத்திருந்து அது வராமலே நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு அதை விரிவுபடுத்தி "மந்திரி குமாரி'' என்ற பெயரில் நாடகமாக எழுதினேன். பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம், நாங்கள் படமாக ஆக்குகிறோம், தருவீர்களா என்று கேட்டார்கள். ஒப்புக் கொண்டேன்.

அதுதான் எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரி குமாரி''. இது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தப் படம் எவ்வளவு பெயர் பெற்றது, புகழ் பெற்றது, வசூலை அள்ளிக் கொடுத்தது என்பதெல்லாம் கலைத் துறையிலே உள்ள நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பார்த்த ரசிகர்களிலே பலருக்கும் நன்றாகத் தெரியும்.

எந்தக் கதை தெரியுமா? திருச்சி வானொலி நிலையத்திலிருந்து திருப்பிக் கூட அனுப்பப்படாமல், அங்கிருந்த குப்பைக் கூடைக்குப் போன அந்த "குண்டல கேசி'' கதை அவ்வளவு பெரிய வெற்றியை கலைத்துறையிலே தந்தது. இதை நான் சொல்வதற்குக் காரணம், அந்த அளவுக்கு நம்முடைய இயக்கக் கருத்துக்களை இந்த இயக்கத்திலே ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாக அப்போது வானொலி இருந்தது.

ஆனால் அந்த வானொலிதான் 1948-ம் ஆண்டு "வீட்டுக்கு ஒரு புத்தகசாலை'' என்ற தலைப்பிலே சிலரை அழைத்துப் பேசச் சொன்னபோது, அந்தப் பேச்சாளர்களில் ஒருவராக அறிஞர் அண்ணாவையும் அழைத்து, அண்ணா பேசினார்.

அண்ணா வானொலியிலே பேசப்போகிறார் என்று கேள்விப்பட்டதும், அந்தச் செய்தி வந்ததும் ஒவ்வொரு ஊரிலும் அங்கேயிருக்கின்ற கடைகளில், ஓட்டல்களில், எங்கெங்கே வானொலிகள் இருந்தனவோ அங்கெல்லாம் நின்று பத்து பேர், நூறு பேர், இருநூறு பேர் என்று வானொலியில் அண்ணாவின் உரையைக் கேட்டோம்.

வானொலியில் அண்ணாவின் குரலைக் கேட்பதென்றால் சாதாரணமா என்ற அந்த வியப்போடு அதைக் கேட்டோம். அப்போது அண்ணா பேசியதில் ஒரு பகுதியை மாத்திரம் படித்துக் காட்ட விரும்புகிறேன்.

வீட்டின் அலங்காரத்தையும், விசேஷ கால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பது போல வீட்டிற்கோர் புத்தகச்சாலை, சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம் இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும்.

வீட்டிற்கோர் புத்தகச்சாலை நிச்சயமாக வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் அலங்காரப் பொருள்களுக்கும், போகபோக்கியப் பொருள்களுக்கு தரப்படும் நிலைமாறி, புத்தகச் சாலைக்கும் அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், ஒவ்வொரு வீட்டிலும் முதல் இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும்'' என்று அண்ணா பேசினார்.

தமிழ்நாட்டிலே கூட உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து வருகின்ற ஒரு அரசு தான் ஒவ்வொரு வீட்டிலும் புத்தக சாலை வேண்டும் என்று அண்ணா சொன்னாரே, அதைப் போல ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், ஒரு புத்தக சாலை வேண்டும் என்ற அந்தக் கொள்கையின் அடிப்படையில் இன்றைக்கு இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இது அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ள காட்சி என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

1948-ல் அண்ணா அப்படி பேசினார். அந்தக் காலக்கட்டத்திலே தான் பேராசிரியருக்கு நன்றாகத் தெரியும், திருவாரூரில் மாணவர் அமைப்பு ஒன்றை நிறுவி, "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்'' என்று அதற்குப் பெயரிட்டு அதை நாங்கள் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த மன்றத்தின் சார்பாக பாரதிதாசன் வாசக சாலை, பெரியார் படிப்பகம், அண்ணா நூலகம் என்றெல்லாம் பெயரிட்டு பொழுதுபோக்குக்காக அல்ல, கருத்துக்களை மக்களுக்கு எடுத்துப் பரப்புகின்ற அந்தப் பணிக்காக வீதிதோறும் ஊர்தோறும் அந்தக் காரியங்களை நாங்கள் நடத்தி வந்தோம்.

அப்படிப்பட்ட அந்த அடிப்படை உணர்வும், முயற்சிகளும் வேரோடு, உயிரோடு கலந்திருந்த காரணத்தினால்தான் இன்றையதினம் இவ்வளவு பெரிய வெற்றியை இங்கே அண்ணா பெயரால் ஒரு நூலகத்தை உருவாக்க எங்களால் முடிந்தது என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு நான் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணாவினுடைய இறுதிவரை, அண்ணாவிற்கு பெருமை சேர்த்து விட்டு, அவருடைய சிலையைப் பார்க்கும்போதும், அவருடைய பெயரால் அமைந்துள்ள இந்த நூலகக் கட்டிடத்தின் உயரத்தை அண்ணாந்து பார்க்கும்போது நெஞ்சில் எழுகின்ற அந்தத் துன்ப அலைகள் விழி வழியாக வழிகின்ற அந்த நிலையைத் தடுக்க முடியவில்லை. மன்னிக்க வேண்டும். இடையிடையே அதன் காரணமாக என்னுடைய பேச்சின் கோர்வை அறுந்து விடுமேயானால் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு தொடருகிறேன்.

அண்ணா எதை நினைத்தாரோ, இல்லையோ இறுதிநாள் வரையில் புத்தகத்தையே நினைத்துக் கொண்டிருந்தார். அவருடைய முடிவு மருத்துவர்களால் கணிக்கப்பட்டு, அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, அடையாறு மருத்துவமனையிலே கடைசியாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்காக அவருடைய அறையிலிருந்து அவர் அழைக்கப்பட்டபோதுகூட, துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார்.

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டொரு நாள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்திய நேரத்தில்கூட படித்துக் கொண்டுதான் இருந்தார். ஒருவேளை நம்ப வேண்டுமேயானால், காலன் என்று ஒருவன் இருந்து, அவன் அண்ணாவின் உயிரையெடுக்க வந்தால், அந்தக் கற்பனையைச் செய்து பார்த்தால், "காலனே, இரு வருகிறேன், இன்னும் இந்தப் புத்தகத்தில் இத்தனை பக்கங்கள் பாக்கியிருக்கின்றன'' என்று சொல்லிவிட்டு ஒருவேளை அவனோடு சென்றிருப்பாரோ என்று எண்ணுகின்ற அளவிற்கு புத்தகத்திலே இறுதி நாள் வரையிலே ஆழ்ந்திருந்தவர் அண்ணா.

அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு காஞ்சீபுரம் சென்று கதவைத் தட்டினால், அண்ணா எங்கேயென்று கேட்டால், உள்ளேயிருக்கிறார் என்று சொன்னால், புத்தகமும் கையுமாகத் தான் அண்ணா படுக்கையிலே இருப்பார். அப்படி புத்தகமும் கையுமாக இருந்த அண்ணாவை சிலை வடிவில், புத்தகமும் கையுமாக சிலை வடிவிலே இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

அந்த அண்ணாவின் நினைவாக நாம் உருவாக்கியிருக்கின்ற இந்த எழில் மாளிகை தம்பி தென்னரசுவின் உழைப்பால், முயற்சியால் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. யாரிடத்திலே எந்தக் காரியத்தை ஒப்படைக்க வேண்டுமென்று சிந்தித்து ஒப்படைக்கும்போது, அப்படி என்னைப் பொறுத்தவரையில், எங்கள் மாவட்டக் கழகச் செயலாளர்களில் இதுபோன்ற காரியங்களை விரைந்து, வியந்து போற்றும் வண்ணம் படைப்பவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தென்னரசின் தந்தை தங்கப்பாண்டியன் ஆவார்.

அந்தத் தங்கபாண்டியன் பெற்ற செல்வம், தந்தைக்கு நிகராக எங்கள்பால் அன்பு செலுத்தியது மாத்திரமல்ல, நாங்கள் ஆற்றுகின்ற பணிக்கு உதவியாகவும் இருந்து நான் கடிந்தால் வருந்தாமல், நான் வாழ்த்தினால் அதை ஊக்கமாகப் பெற்று இன்றைக்கு இந்தப் பெரும் பணியை ஆற்றி முடித்திருக்கிறார். என் சார்பாகவும், நம்முடைய பேராசிரியர் சார்பாகவும், நாளை முதல் நம் நூலகத்திற்கு வந்து நூல்களை வாங்கிச் செல்வோர், படிப்போர் அத்தனை பேர் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

தி.மு.க.வில் இவர் தென்னரசு "செகண்ட்''. தென்னரசு என்று ஒருவர் இருந்தார். அவர் மறைந்துவிட்டாரே என்ற கவலை எனக்குண்டு. அந்தக் கவலையைப் போக்குகின்ற அளவிற்கு இந்தத் தென்னரசு காரியமாற்றியிருக்கிறார். அதுதான் இந்த அண்ணா நூலகம் என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இந்த அண்ணா நூலகத்தினுடைய திறப்பு விழாவில் இரண்டொரு அறிவிப்புகளை அண்ணாவின் நினைவாக வெளியிட விரும்புகிறேன்.

1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைக்கின்ற இந்த நேரத்தில் இதனை மாணவர்கள் பெரிதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களைப் பற்றி நினைக்கும்போது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு அறிவிப்பினை இங்கே அளிக்க விரும்புகிறேன். மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் கடந்த காலத்தில், எம்.ஜி.ஆர். ஆட்சியால் தொடங்கப்பட்டு, அதனை வரவேற்று அது மேலும் சத்துள்ள உணவாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, நமது தி.மு.க. மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 3-6-1989 முதல்; 2 வயதிலேயிருந்து 15 வயது வரை உள்ள குழந்தைகள், மற்றும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டையென வழங்கப்பட்டு வந்தது.

தி.மு.க. ஐந்தாவது முறையாக 2006-ம் ஆண்டு பதவிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ஜுலை 15-ம் நாள் முதல் அதாவது காமராஜர் பிறந்தநாளையொட்டி அவர் நினைவாக வாரம் ஒன்றுக்கு இரண்டு வேக வைத்த முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் இரண்டு முட்டைகள் என்பது; வாரம் மூன்று முட்டைகள் என்ற அளவிற்கு வழங்கப்பட்டு வருவதோடு, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் அதற்குப் பதிலாக வழங்கப்பட்டு வருகிறது. அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரமாண்டமான நூலகத்தைத் திறந்து வைக்கும் இந்த நேரத்தில், பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும், வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும், வேகவைத்த முட்டைகள் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்.

2. அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தினக் கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் தற்போது தற்காலிகமாக பணிபுரிந்து சுமார் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை மாத ஊதியமாகப் பெற்று வருகிறார்கள்.

காலம் காலமாக அடித்தளத்தில் இருந்து பணிபுரிகின்ற இந்தத் துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் வலிவுடன் அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, அந்தத் துப்புரவு தொழிலாளர்களில் மூன்று ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, இனி; மாதம் ரூ.1300 - 3000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து மாதம் ஒன்றுக்கு தொடக்க நிலையில் ரூ.2,320 கிடைத்திடும் வகையில் ஊதியமாக உயர்த்தி வழங்கப்படும்.

இத்துடன் அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வினையும், ஆண்டு தோறும் மூன்று சதவிகிதம் கூடுதல் ஊதியப்படியினைப் பெறும் தகுதியையும் இந்தத் துப்புரவு தொழிலாளர்கள் பெறுவார்கள் என்பதை அடித்தட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் எழுதி, பேசி, உழைத்த அண்ணாவின் பிறந்த நாளான இன்று அறிவிப்பதில் மெத்தவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அறிவிப்புகள் உடனடியாக செயல்படுத்தப்படும்.

இந்த நூலகத்திற்கு வருவோர், போவோர், நூல்களை எடுத்துச் செல்வோர், இவர்கள் எல்லாம் இந்த நூலகத்தின் தூய்மை கருதியும், இதனுடைய பெருமைகளைக் கருதியும், இதை நம்முடைய நூலகமாகக் கருதி காப்பாற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நூலகத்திற்கு தொலைவிலிருந்து வருகின்றவர்கள், பேருந்துகளிலே வருகின்றவர்களுக்குக் கூட, இந்த நூலகத்திற்கு என்று குறிப்பிட்ட பேருந்துகளிலே வந்தால் அந்தக் கட்டணத்தைக்கூட ஓரளவு குறைத்து அதை அமல்படுத்தலாமா என்ற கருத்தும் இருக்கிறது. எனவே, எல்லா வகையிலும் அண்ணா பெயரால் அமைந்துள்ள இந்த நூலகத்தினுடைய திறப்பு விழாவிலே இந்த அறிவிப்புகள் பொருந்தும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+