ஜெ.வுக்கு நாடு கொடநாடுதான், கருணாநிதிக்கு தமிழ்நாடு-ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கூடலூர்: எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் தான் மக்களை சந்திக்க வருவார். அதுவும் ஹெலிகாப்டரில் தான் வருவார். மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. அவர் ஓய்வு எடுக்க சிறுதாவூர் செல்வார். இல்லையென்றால் கோடநாடு வருவார். ஜெயலலிதாவுக்கு நாடு கோடநாடு தான். ஆனால் கலைஞருக்கு நாடு தமிழ்நாடு தான் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில்,

அண்மையிலே நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது அதிக சேதம் ஏற்பட்டது. அப்போது பல வீடுகள் இடிந்தன. பல உயிர் சேதங்கள் ஏற்பட்டன. உடனடியாக நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன. இங்கு நடந்த நிவாரண பணிகளை மத்திய மந்திரி, மாநில அமைச்சர்களை கலைஞர் அடிக்கடி தொடர்பு கொண்டு, ஒரு நாளைக்கு 25 முறையாவது தொடர்பு கொண்டு விசாரித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மலை வாழ் மக்கள் வாழ்கிற இந்த மாவட்டத்தை பொறுத்தவரை உங்களை மனதில் வைத்து கலைஞர் எந்த அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதிகளை ஒரு புத்தகமாக தயாரித்து மக்களிடம் கொடுத்து மக்கள் படித்து பார்க்க வேண்டும். அதை படிக்கும் போது அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அப்படி நம்பிக்கை வந்தால் தான் நமக்கு வாக்களிப்பார்கள் என்பதற்காக அந்த தேர்தல் அறிக்கை புத்தகமாக மக்களிடத்திலே வழங்கப்பட்டது.

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தற்போதைய உள்துறை மந்திரியாக இருக்கிற ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரம் செய்யும் போது கலைஞர் தயாரித்து வழங்கிய தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று கூறினார். அந்த அளவுக்கு நமது தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் பதிந்தது. தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டிருப்பது எந்த அளவுக்கு நிறைவேறி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

சட்டமன்ற தேர்தலின் போது ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு தருவோம் என்று கலைஞர் சொன்னார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட எதிர்க்கட்சியினர் அது முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இப்போது 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அல்ல, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியிருக்கிறார்.

கலைஞர் ஆட்சி பொறுப்பேற்ற போது முதல் கையெழுத்தாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடிக்கான உத்தரவு, அதைதொடர்ந்து சத்துணவில் 2 முட்டை போடும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

நேற்று முன்தினம் அண்ணா பிறந்த நாள் முதல் சத்துணவில் வாரத்துக்கு 5 முட்டை போட கலைஞர் உத்தரவிட்டுள்ளார். திருமண பெண்களுக்கான உதவி தொகை திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை தவிர அறிவிக்காத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத திட்டமான கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்த நிதி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. கம்யூனிச கட்சிகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் கூட இது போன்ற திட்டங்கள் கிடையாது.

தமிழகத்தில் 21 லட்சம் பேரில் முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் ரூ.ஆயிரத்து 800 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 267 தகுதி வாய்ந்தவர்களில் 216 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.

தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் அல்லாமல் சொல்லாத திட்டங்களையும் கலைஞர் நிறைவேற்றி வருவதால் 6-வது முறையாக அவர் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார். இது போன்று கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள் எங்களின் குறைகளை சுட்டி காட்டலாம். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் தான் வருவார். அதுவும் ஹெலிகாப்டரில் தான் வருவார். மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. அவர் ஓய்வு எடுக்க சிறுதாவூர் செல்வார். இல்லையென்றால் கோடநாடு வருவார். ஜெயலலிதாவுக்கு நாடு கோடநாடு தான். ஆனால் கலைஞருக்கு நாடு தமிழ்நாடு தான். ஜெயலலிதா, கலைஞரை பற்றியும் கழகத்தை பற்றியும் விமர்சனம் செய்து வருகிறார்.

கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களால் குறை கூற முடியவில்லை. ஏதோ குறை கூற வேண்டும் என்பதற்காக சில எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றனர். அடுத்து கலைஞர் ஆட்சி தான் உருவாக போகிறது. அடுத்து பதவிக்கு வர போகிறோம் என்ற ஆணவத்தில் பேசவில்லை. வெற்றியை கண்டு வெறிகொள்பவர்கள் அல்ல நாங்கள். தோல்வியை கண்டு துவண்டு போவர்களும் அல்ல நாங்கள். தி.மு.க. பல வெற்றி, தோல்விகளை கண்ட கட்சி. எனவே எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார் ஸ்டாலின்.

திமுகவை அரியணை ஏற்றிய மாணவர்கள்:

முன்னதாக திமுக இளம் பேச்சாளர்களுக்கான 2 நாள் பயிற்சி பாசறையை தொடங்கி வைத்துப் பேசிய ஸ்டாலின்,

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தி திமுகவை ஆட்சியில் அமர வைத்ததில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும்தான் முக்கியப் பங்கு இருந்தது.

திமுக சார்பில் தற்போது இளம் பேச்சாளர்களுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆரிய பாரம்பரியமும், திராவிட பாரம்பரியமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அத்தகைய பழமையான திராவிட பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சீர்திருத்தக் கருத்துகளை பயிற்சிப் பாசறைகள், படிப்பகங்கள் போன்றவையே பரிமாறி வந்தன. இத்தகைய நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும். இத்தகைய பயிற்சிப் பாசறைகளை அடிக்கடி நடத்த வேண்டும். தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சிகள் தொடரவேண்டும்.

இப்போது திமுகவிலும், சார்பு அமைப்புகளிலும் பொறுப்பிலுள்ள 70 சதவீதத்தினருக்கு இந்த இயக்கத்தின் வரலாறு முழுமையாகத் தெரியாது. இந்நிலையை மாற்ற வேண்டும். இலக்கியமே தெரியாதவர்கள்கூட இலக்கிய அணிச் செயலராக ஆசைப்படுகின்றனர் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+