அயோத்தி தீர்ப்பு எதிரொலி-உ.பியில் அமைதிப் பேரணிகள் நடத்த அரசு தடை
லக்னோ: அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி அமைதி காக்குமாறு கோரி அமைதிப் பேரணிகள் நடத்த உ.பி. அரசு திடீரென தடை விதித்துள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதிகளையும் அது ரத்து செய்துள்ளது.
செப்டம்பர் 24ம் தேதி அயோத்தி தீர்ப்பை அளிக்கவுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். இதையடுத்து அமைதி காக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. சில பேரணிகளுக்கு அரசு அனுமதியும் கொடுத்திருந்தது. ஆனால்தற்போது அவற்றை ரத்து செய்துள்ளது மாநில அரசு.
இதுகுறித்து லக்னோ மாவட்ட உதவி ஆட்சியர் ஓ.பி.பாதக் கூறுகையில்,அரசின் உத்தரவுப்படி மறு உத்தரவு வரும் வரை அமைதிப் பேரணிகள் நடத்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதிகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும் இந்த தடை உத்தரவு செல்லுபடியாகும் என்றார்.
பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி:
இதற்கிடையே அயோத்தி நகரம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் வளை யத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இங்கு மத்திய போலீஸ் படையினரும், உத்தரபிரதேச போலீசாரும் கூட்டாக பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றனர். அயோத்தியில் மட்டும் 52 கம்பெனி மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிரடிப்படை பிரிவும் உள்ளது. சர்ச்சைக் குரிய இடத்தை சுற்றி அதிரடிப்படையினர் தயார் நிலையில் நிற்கின்றனர்.
உத்தரபிரதேசம் முழுவதும் நிலைமை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு மற்ற மாநிலங்களை விட கூடுதல் பாதுகாப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மட்டுமே 1 லட்சத்து 94 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 32 இடங்களில் பதட்டம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 4 இடங்கள் மிக மோசமான பகுதியாக கணித்து உள்ளனர். இந்த பகுதிகளில் அதிரடிப்படை யினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அனைத்து மாநில போலீசாரும் அதே போல பதட்டமான பகுதிகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு வழங்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் தவிர மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மோசமான நிலை ஏற்படலாம் என்று கருதுகின்றனர். எனவே அதிகபட்ச பாதுகாப்பு வழக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களிடம் பதட்டம், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை டி.வி. நிறுவனங்கள் வெளியிடக் கூடாது. இது தொடர்பான கருத்து கணிப்புகளையும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
இதற்கிடையே, கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் 24ம் தேதியும், அதற்கு அடுத்த நாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கருத்துக் கணிப்பு நடத்த-எஸ்எம்எஸ் அனுப்ப தடையில்லை:
இதற்கிடையே, அயோத்தி தீர்பபு தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்துவது, எஸ்.எம்.எஸ். அனுப்புவது போன்ற செயல்களைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதுதொடர்பாக பிரின்ஸ் லெனின் என்றவக்கீல் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், பேச்சு சுதந்திரம் என்பது அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள அடிப்படை உரிமை, அதில் தலையிட முடியாது என்று கூறி விட்டது.
செய்தியாளர்களுக்குத் தடை:
இதற்கிடையே, அயோத்தி தீர்ப்பு நாளன்று, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டிவி, பத்திரிக்கை என மீடியாவைச் சேர்ந்த யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று அது உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் சேர்ப்பதையும் அதனால் பதற்றம் ஏற்படுவதையும் தவிர்க்கவும் இதர மனுதாரர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் தங்களுடைய பணிகளைச் செய்ய இடையூறு நேராமல் இருக்கவும் இந்த உத்தரவை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதேசமயம், தீர்ப்பு நகலை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்துப் பெற்றுக் கொள்ளலாம் என மீடியாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications