மலேசியாவில் சினிமா பைனான்சியர் கொலை-உறுதியானது
சென்னை: சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் மலேசியாவில் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த சினிமா பைனான்சியர் முத்துராஜா கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் உள்ள தனது வக்கீல் நண்பர்களான சுரேந்தர், பத்மநாபன் ஆகியோரை தொழில் விஷயமாக சந்திக்கச் சென்றார்.
ஆனால், அவர் திரும்பி வரவி்ல்லை. மாயமாகிவிட்ட அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது மனைவி உஷாராணி மலேசியா சென்று அங்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துராஜாவை தேடி வந்தனர்.
மேலும் வக்கீல் சகோதரர்களான பத்மநாபன், சுரேந்தர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முத்துராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.
இந்தத் தகவலை சென்னையில் இருந்த உஷாராணியிடம் மலேசிய போலீசார் தெரிவித்தனர். ஆனால் உஷாராணி தனது கணவர் உயிரோடு இருகாகலாம் என்று கூறிவந்தார்
இரு தினங்களுக்கு மலேசியா சென்ற உஷாராணியிடம் மலேசியாவின் பந்திங் பகுதி போலீஸார் முத்துராஜாவை, வக்கீல் சகோதரர்கள் கொலை செய்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
பண விவகாரத்தில் வக்கீல் சகோதரர்கள் இருவரும் முத்துராஜாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உடலை இவர்கள் தங்களது பண்ணை வீட்டின் அருகில் ஓடும் ஆற்றின் அருகே புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மலேசிய போலீசார் கடந்த 2 வாரங்களாக ஆற்றின் அருகே தேடி வந்தனர்.
அப்போது சில மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் கிடைத்தன. இவை யாருடையவை என்று தெரியவில்லை.
வக்கீல் சகோதரர்களை சந்திக்க வந்து மாயமானவர்கள் பற்றிய பட்டியலை போலீசார் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதில் சுசிலாவதி, அவரது வக்கீல் அப்துல் கரீம், வங்கி அதிகாரி நூர்கிசம் மற்றும் கம்ருதீன் ஆகியார் இந்த சகோதரர்களை சந்திக்க வந்து மாயமாகிவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இவர்களும் கொன்று புதைக்கப்பட்டார்களோ என்ற விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே உஷாராணி சென்னையில் இருந்தபோது, 2 பேர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, நாங்கள் மலேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உங்கள் கணவர் சென்ற காரில் இருந்து 2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.10 லட்சம் பணத்துடன் உடனே மலேசியாவுக்கு வர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
தினமும் சுமார் 20 முறை அவர்கள் உஷாராணியிடம் பேசியுள்ளனர். வக்கீல் சகோதரர்கள் தான் இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
முத்துராஜா காணாமல் போன விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பல தகவல்கள் கிடைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
