அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைப்பதே இலக்கு: பாஜக
சென்னை: மத மோதல்களுக்கு இடம் தராத வகையில் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை தீர்ப்பளித்துள்ளது. இது தனி மனிதனுக்கோ, தனி ஒரு இயக்கத்துக்கோ கிடைத்த வெற்றியல்ல.
இது ராமருக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பு வெளியாகும் முன்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் அறிவுரை வழங்கினார்கள்.
இப்படி மற்றவர்களுக்கு அறிவுரை கூறியவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பை ஏற்று இனி நாட்டில் மத மோதல்களுக்கு இடம் தராத வகையில் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அது தான் பாஜகவின் இலக்கு என்றார்.
இந்துக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்-இமக:
ராமஜென்ம பூமியில் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்துக்களின் விருப்பம் வெகு விரைவில் நிறைவேறும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமர் பிறந்த இடத்தை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ராமர்தான் முதல் உரிமையாளர் என்றும் கூறியுள்ளது. கரசேவகர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைகளை அங்கிருந்து அகற்றக்கூடாது என்றும், வழிபாடுகள் தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் ராமஜென்ம பூமியில் கோயில் அமைக்க வேண்டும் என்ற இந்துக்களின் விருப்பம் வெகு விரைவில் நிறைவேறும். இந்த தீர்ப்பை ஆரவாரம் இல்லாமல் வரவேற்கிறோம்.
ராமஜென்ம பூமியை முழுமையாக மீட்க சட்டப்பூர்வமான முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
