ஸ்டாலின் மருமகன் போட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்க-ஜெ.
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் போட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கோவையில் 13.7.10 அன்றும், திருச்சியில் 14.8.10 அன்றும் நான் பேசிய பேச்சிலும், அதைத் தொடர்ந்து 28.8.10 அன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் நான் வெளியிட்ட அறிக்கையிலும் சபரீசனை அவதூறாக சித்தரித்ததாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அவர் எனக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் கிடைக்கவில்லை.
வழக்கில் சபரீசன் கூறிய குற்றச்சாட்டின்படி நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. பொதுமக்களின் நலன் கருதி, போலி மருந்துகளால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அவர்களின் ஆரோக்கியத்துக்கான நல்லெண்ணத்துடன் கருத்து தெரிவித்தேன். அவரை புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் என்னிடம் இல்லை.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் நலனுக்காக அப்படி பேசினேனே தவிர, எனது சுய லாபத்துக்காக நான் பேசவில்லை. கருத்துகளை தெரிவிப்பதற்கு அரசியல் சாசன சட்டத்தின்படி உரிமை அளிக்கப்பட்டு உள்ளது. நான் கூறிய குற்றச்சாட்டு நேர்மையானதுதான். அரசின் சில குறைகளை மக்களுக்காக கூறினேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த முகாந்திரங்கள் இல்லை.
எனது பேச்சால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அவர் வழக்கு தொடர முடியாது. ஆனால் குற்ற முகாந்திரம் இல்லாமல் அந்த வழக்கில் சபரீசனின் வாக்குமூலத்தை சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட்டு ஆர்.கிள்ளிவளவன் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த வழக்கில் 15-ந் தேதி நான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
குற்ற முகாந்திரம் காணப்பட்டதற்கான தனி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எந்திரத்தனமாக, மனதைச் செலுத்தாமல் எனக்கு சம்மன் அனுப்பி தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத்தின்படி ஏற்க முடியாத நடவடிக்கையாகும். சம்மன் அனுப்புவதற்கான காரணங்கள் இருந்திருந்தால் ஆஜராவதற்கு எனக்கு சம்மன் அனுப்பி இருக்கலாம்.
சட்டத்தின்படி பார்க்கும்போது என்மீது தொடரப்பட்ட வழக்கு சரியானதல்ல. நேர்மையான நடைமுறை பின்பற்றப்படவில்லை. கோர்ட்டு நடைமுறைகள் மீறப்பட்டு உள்ளன. இந்தக் கோர்ட்டுக்கு உள்ள அதிகார எல்லையில் இந்த சம்பவம் நடக்கவில்லை. எனவே, சபரீசனின் புகாரை கோர்ட்டு விசாரிக்கக் கூடாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் கூறப்பட்டு உள்ளது என்பதை கோர்ட்டு கவனிக்கத் தவறிவிட்டது. எனவே, என்மீது தொடரப்பட்டுள்ள புகாரையும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணையையும் ரத்து செய்ய வேண்டும்.
நான் அரசியல் செயல்பாட்டில் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறேன். எனவே கோர்ட்டில் ஆஜராக முடியாது. எனக்கு பதிலாக வக்கீல் ஒருவரை ஆஜராக அனுமதிக்க வேண்டும்.
எனவே, அந்த வழக்கின் அனைத்து மேல்நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து, அவை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications