மதுரையில் அதிமுக பேனர்கள் அகற்றத்தால் பதட்டம்
மதுரை: மதுரை நகர் முழுவதும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்கள் நகரையே மறைத்துக் கிடக்கும் நிலையில் அதிமுகவினர் வைத்த பேனர்களை மட்டும் போலீஸார் அகற்றியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் வரும் 18 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்த உள்ளார்.
இதனை முன்னிட்டு, ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாகவும், ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தும் விதமாகவும் மாநகரின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான விளம்பர போர்டுகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர்.
இந்த போர்டுகள் மாநகராட்சியின் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
அப்போது, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலத்தில் அ.தி. மு.க. தொகுதி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் சார்பில் பிரமாண்ட விளம்பர போர்டை, மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்திய போது, அது இரண்டாக உடைந்தது.
இது பற்றி தகவல் அறிந்த 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க -வினர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீசார் அனுமதி பெறாமல் வைக்கப் பட்டதால் விளம்பர போர்டை அகற்றியதாக கூறினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரை முழுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி உள்ளிட்டோரை வாழ்த்தியும், புகழ்ந்தும் நகர் முழுவதும் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் தொடர்ந்து அப்படியே நீடிக்கின்றன. இதனால் அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications