செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் கேசில்.. சீக்கிரம் ஆக்சன் எடுங்க! ஆளுநருக்கு விஜய் போட்ட பிரஷர்
சென்னை: திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட (PMLA) கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு விஜய் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது. நிலுவையில் உள்ள இந்த முக்கிய கோப்புகளை விரைந்து பரிசீலித்து, உரிய அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மூலம் ஆளுநர் மாளிகைக்கு முறைப்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாஜி அமைச்சர்கள் மீது மத்திய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள் தொடுத்துள்ள இந்த வழக்குகளில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநில அரசின் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் (Prosecution Sanction) அவசியமாகிறது. இந்தச் சூழலில், புதிய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இக்கோப்புகள் மீதான இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: பின்னணியும் தற்போதைய நிலையும்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் (2011-2016) போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி, கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறை அவரை அதிரடியாகக் கைது செய்தது.
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கும், குற்றப்பத்திரிகையை இறுதி செய்வதற்கும் செந்தில் பாலாஜிக்கு எதிரான 'விசாரணை அனுமதி' (Sanction to Prosecute) கோப்பு நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே சுழன்றுகொண்டிருந்தது. கடந்த மே மாதம் 15-ம் தேதி, அமலாக்கத்துறை இதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை ரகசிய குறிப்புகளுடன் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தக் கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை அரசு வலியுறுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: 120 நாட்கள் கெடு!
மற்றொருபுறம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கும் அமலாக்கத்துறையின் பிடியில் தீவிரமடைந்துள்ளது. 2001-2006 காலகட்டத்தில் சுமார் 2.07 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக 2006-ல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2020-ல் PMLA வழக்கைத் தொடங்கியது. அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள 18-க்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரணை செய்ய அனுமதி கோரி, கடந்த மே 20-ம் தேதி அமலாக்கத்துறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. புதிய பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 218-ன் கீழ், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடிதம் கிடைத்த 120 நாட்களுக்குள் மாநில அரசு எந்தவொரு முடிவையும் எடுக்காவிட்டால், அந்த அனுமதி 'வழங்கப்பட்டதாகவே கருதப்படும்' (Deemed Sanction) என்று கடுமையான சட்ட விதியை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. 120 நாட்கள் கெடு நெருங்கி வருவதால், இக்கோப்பையும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி, விரைந்து முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆளுநர் மாளிகையின் முடிவு என்ன?
மத்திய விசாரணை முகமைகளான அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் மீது நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடங்க மாநில ஆளுநரின் ஒப்புதல் கட்டாயமாகும். செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் கோப்புகளும் தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த அவசர வலியுறுத்தல் ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, இந்த கோப்புகளுக்கு ஆளுநர் எப்போது பச்சைக்கொடி காட்டுவார் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இந்த இரு பெரும் தலைவர்கள் மீதான பிடி இறுகுவது, தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
