சுப்ரீம் கோர்ட் விதித்த வழிமுறைகளின்படிதான் லத்திகா நியமிக்கப்பட்டார்-தமிழக அரசு
சென்னை டிஜிபி பதவிக்கு லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எல்லாம் விதிமுறைப்படிதான் நடந்தது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை சில நாளேடுகள் தங்கள் விருப்பம்போல் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. நியமனத்தை பொறுத்தவரையில், சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளையே தமிழக அரசு பின்பற்றியுள்ளது. கோர்ட் ஆணைகளின்படி, இந்த பதவிக்கான நியமனம் ஒரு தேர்வு நியமனம் (செலக்ஷன்) ஆகும்.
இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்யும்போது, அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றும் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களது பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில போலீஸ் டி.ஜி.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், தேர்வு நியமனம் என்பதால், பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலே மட்டும் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள டி.ஜி.பி. பதவியிடங்களுக்கு பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஏற்று செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ள போதிலும்; அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று யு.பி.எஸ்.சி. சுப்ரீம் கோர்ட்டை கோரியுள்ளது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் இதுகுறித்து உரிய ஆணைகள் எதையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்த விவரங்களை யு.பி.எஸ்.சி., சென்னை உயர்நீதிமன்றத்திலும் தனது பதில்உறுதி ஆவணத்திலும் சுட்டிக்காட்டி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசும் இரு முறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது. இந்த விவரத்தையும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கின்போது கொண்டு வந்துள்ளார்.
யு.பி.எஸ்.சி. பட்டியல் தயாரிக்க இயலாத சூழ்நிலையில், தமிழகத்தில் அந்த காலக்கட்டத்தில் பணியாற்றிடும் அனைத்து டி.ஜி.பி.க்களும் கருதப்பட்டு, லத்திகா சரண், தமிழக அரசால் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றி உள்ளது என்பது தெளிவு. உயர்நீதிமன்றத்தின் முழுத்தீர்ப்பின் நகலைப் பெற்று, தீர்ப்பின் வாசகங்களை நன்கு ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று விளக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications