For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.ஜி.பி. நியமனம்: லட்சுமி நாராயனண், சி.வி. நரசிம்மனுக்கு கி.வீரமணி கண்டனம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக டிஜிபி நியமன விஷயத்தில் அரசை குறை கூறியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளான லட்சுமி நாராயனண், சி.வி. நரசிம்மன் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (டி.ஜி.பி.) லத்திகா சரண் சட்டம் ஒழுங்குத் துறையின் மாநில தலைமைப் பொறுப்பதிகாரியாக சிறிது காலத்திற்கு முன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே இருந்த டி.ஜி.பி. ஜெயின் என்பவர் நீண்ட நாள்கள் விடுமுறையில் செல்வதால், காலியாகும் அப்பதவிக்கு வேறு வெளி மாநில அல்லது மத்திய அரசு பதவிக்கு சென்றுள்ளவர்கள் தவிர, ஓய்வு பெற்றவர்களைத் தவிர, இங்குள்ள மூவர் கொண்ட ஒரு பட்டியலில் ஒருவராக இடம் பெற்றுள்ள இந்த அம்மையார் நியமிக்கப்பட்டார்!.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் என்று கூறி, நட்ராஜ் ஐ.பி.எஸ். அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ரிட்" மனு போட்டு, குறிப்பிட்ட அதிகாரி (லத்திகா சரண்) நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருந்தார்.

இதை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்து 8.10.2010 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவரது நியமனத்தில் சரியாக சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது போன்று அத்தீர்ப்பு, பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் அதுவும் உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற பிரச்சனை (டி.ஜி.பி. நியமன வழிகாட்டு நெறிமுறைகள்) பற்றிய ஒரு இடைத் தீர்வுக்கான மனு (ஐ.ஏ.) நிலுவையில் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளதோ என்று கருதும் வண்ணம் அத்தீர்ப்பு அமைந்துள்ளது.

இத்தீர்ப்பு வெளியான அன்று இரவே, இதுபற்றி தமிழக அரசு ஒரு தெளிவான விளக்கத்தை தமிழ், ஆங்கில நாளேடுகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெளியிட்டு, இந்த நியமனத்தில் சட்டவிதிகள் பின்பற்றப்படாமல் இல்லை. எல்லாம் முறைப்படி, சட்டப்படிதான் நடைபெற்றது. இத்தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு 8.10.2010 மாலை வெளியிட்ட அறிக்கை இதோ:

தமிழக காவல்துறை டி.ஜி.பி. நியமனத்தை பொறுத்தவரையில், உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளையே தமிழக அரசு பின்பற்றியுள்ளது. கோர்ட்டு ஆணைகளின்படி, இந்த பதவிக்கான நியமனம் ஒரு தேர்வு நியமனம் (செலக்சன்) ஆகும்.

இந்தப் பணியிடத்திற்கு தேர்வு செய்யும்போது, அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றும் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களது பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில காவல்துறை டி.ஜி.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், தேர்வு நியமனம் என்பதால், பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலே மட்டும் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள டி.ஜி.பி. பதவியிடங்களுக்குப் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஏற்று செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள போதிலும்; அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று யு.பி.எஸ்.சி. உச்சநீதிமன்றத்தைக் கோரியுள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் இதுகுறித்து உரிய ஆணைகள் எதையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்த விவரங்களை யு.பி.எஸ்.சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பதில் உறுதி ஆவணத்திலும் சுட்டிக்காட்டி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசும் இருமுறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது. இந்த விவரத்தையும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கின்போது கொண்டு வந்துள்ளார்.

யு.பி.எஸ்.சி. பட்டியல் தயாரிக்க இயலாத சூழ்நிலையில், தமிழகத்தில் அந்தக் காலகட்டத்தில் பணியாற்றிடும் அனைத்து டி.ஜி.பி.க்களும் கருதப்பட்டு, லத்திகா சரண், தமிழக அரசால் காவல்துறை டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றி உள்ளது என்பது தெளிவு. உயர்நீதிமன்றத்தின் முழுத்தீர்ப்பின் நகலைப் பெற்று, தீர்ப்பின் வாசகங்களை நன்கு ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உடனடியாக இதுகுறித்து ஓய்வு பெற்ற இரு பார்ப்பன காவல்துறை அதிகாரிகள் (லட்சுமி நாராயண அய்யரும், சி.வி. நரசிம்ம அய்யரும்) தமிழக அரசு இந்த நியமனத்தில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று மேலே விழுந்து பாய்ந்துள்ளனர்!.

ஆனால், தமிழக அரசு எந்த வகையில் சட்டத்தைப் பின்பற்றத் தவறியது என்பதைப் புரியாமலேயோ அல்லது புரிந்தும் புரியாதது போலவோ இப்படி பல விமர்சனங்களை அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல இப்படி சொல்லப்படுகிறது.

ஆனால், சட்டப்படி என்ன நிலைமை?. மாநிலங்களில் டி.ஜி.பிக்கள் நியமனம் செய்யும் தகுதியில் உள்ளவர்களைக் கொண்ட ஒரு பட்டியல் மத்திய அரசு பணி தேர்வாணையம் (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தயாரிக்க வேண்டும். அதிலிருந்து ஒருவரை அரசு நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

யு.பி.எஸ்.சி. மத்திய தேர்வாணையம் இதற்கு இரண்டு காரணங்களைக் கூறி மத்திய அரசுக்கே எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

1. மத்திய அரசு பணித் தேர்வுக்குழு தான் எங்களது பணி. மாநில அரசுகள் சம்பந்த நியமனங்களுக்கு நாங்கள் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

2. மத்திய அரசின் உள்துறை அதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும்; அவையின்றி நாங்கள் எவ்வாறு பட்டியல் தயாரிக்க முடியும்? என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அது அங்கே நிலுவையில் உள்ளது!.

சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் (உள் துறையும்) இதன்மீது எந்த ஆணையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை!

அரசு அறிக்கையில் விளக்கியுள்ளதுபோல், இதற்கு அரசால் நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் வெறும் பணிமூப்பு அடிப்படையில் மாத்திரம் நியமிக்கப்பட மாட்டார்கள். தைவிட முக்கியமாக, பணித்திறன், அனுபவம், திறமை எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சித் தலைமைக்கு நம்பிக்கை உள்ளவர்களைத்தான் நியமிப்பது அனுமதிக்கப்பட்ட நடைமுறை.

மத்திய அரசின் உள்துறையை வழிகாட்டும் நெறிமுறைகள்பற்றி யு.பி.எஸ்.சி. மத்திய தேர்வாணையம் கேட்டுள்ளது. இதுவரை அப்படி எந்த வழிகாட்டும் நெறிமுறைகளையும் மத்திய அரசு தேர்வாணையத்திற்குத் தரவில்லை.

இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் முன் மத்திய தேர்வாணையம் ஒரு பதில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான், நீண்ட விடுமுறையில் சென்ற டி.ஜி.பிக்குப் பதில் புதிய நியமனம் செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்படுகிறது. உடனே தமிழக அரசு, தற்போது பதவியில் உள்ள மூவர் கொண்ட பட்டியலை உள்துறையிலிருந்து கேட்டுப் பெற்று அதில் ஒருவரை நியமிக்கிறது!.

இந்தப் பணியிடத்திற்கு தேர்வு செய்யும்போது, அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றும் டி.ஜி.பி. அந்தளிதில் இருந்த அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு அவர்களது பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில போலீஸ் டி.ஜி.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நட்ராஜ் முன்பு சென்னை நகர காவல்துறை ஆணையராக இருந்தபோதே, ஒருமுறை தேர்தல் கமிஷன் ஆணைக்கேற்ப மாற்றப்பட்டு, ஜெயலலிதா ஆட்சியின்போது திரும்பவும் வந்தவர்.

சிறைத் துறை தலைவராக குறுகிய காலத்திலிருந்து தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்டவர். நமது மாநில அரசு சும்மா கைகட்டி, வாய்பொத்தி இருக்கவில்லை. மாறாக மத்திய அரசின் உள்துறை அமைச்சுக்கும் இரண்டு கடிதங்கள் இதற்காக எழுதியுள்ளனர்.

இதை தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து குறிப்பிட்டும் உள்ளார்!

இந்த அசாதாரண சூழ்நிலையில்தான், இருக்கின்ற காவல்துறை மூத்த அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்து அதில் ஒருவரை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவி எவ்வளவு முக்கியமானது; அதை காலியாக வைத்துக்கொண்டிருக்க முடியுமா?.

எனவே, எந்த சட்ட விதி மீறலும் இதில் இல்லை. இது ஒப்பாரி வைக்கும் ஓய்வுபெற்ற பார்ப்பன போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியாதா என்றால்.. நன்றாகத் தெரியும்!.

கருணாநிதி அரசு 'சூத்திர அரசாயிற்றே", பரம்பரை யுத்தத்தில் இவர் ஜெயித்து, பொற்கால ஆட்சியாக ஐய்ந்தாம் முறை ஆட்சி நடத்தி, சொன்னதைச் செய்து முடித்ததோடு, சொல்லாததையும் செய்து சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறாரே என்ற ஆத்திரம்தான், எரிச்சல்தான் அவாளுக்கு. இதனால் தான் இரண்டு ஓய்வு பெற்ற பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் உடனே பாய்ந்து ஆட்சியையே குற்றம் சுமத்தி அறிக்கை விடுகின்றனர்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன முதுமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது!

கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் இமயமலையில் உள்ள பார்ப்பானுக்கு நெரி கட்டும் என்பது!

இன்றும், அன்றும் அது மறுக்க முடியாததாகி வருகிறதே!

இன்றும் உருவாகாத, வழிமுறைகளை சட்டவிதிகளை எப்படி தேடிப்பிடித்து பின்பற்றுவது அன்று நடந்த நியமனத்தில் என்பது, தீர்ப்பு எழுதிய நீதிபதிகளுக்குத்தான் வெளிச்சம்! அந்தோ! தமிழக மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

'அவாளின்" இனவுணர்வை தமிழர்களே, புரிந்து கொள்வீர்களாக!.

இவ்வாறு கூறியுள்ளார் கி.வீரமணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X