தண்டவாளத்தை சேதப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டு சிறை: ரயில்வே ஐ.ஜி. எச்சரிக்கை
சென்னை: தண்டவாளத்தில் கல் வைப்பவர்களுக்கு, தண்டவாளத்தை சேதப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று ரயில்வே ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ரயில்வே ஐ.ஜி. மாகாளி, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 8-ம் தேதி ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைத்து இடையூறு செய்தவர்களை தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த தனிப்படையினர் ஊரப்பாக்கம் பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.
23 பேர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில் கவுதம் (25), பாப்பா (26), மொண்டு மண்டல் (26) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த மூவரும் தாங்கள் தான் சிமென்ட் சிலாப் வைத்ததாக ஒப்புக் கொண்டனர். அவர்கள் அனைவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். ஊரப்பாக்கத்தில் கட்டிடவேலை செய்து வந்தனர். போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் ரயில்வே தண்டவாளத்தை தகர்ப்பது, கல் வைப்பது தொடர்பாக 12 வழக்குகள் உள்ளன. இதில் 6 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இது வரை கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆகும். தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே தண்டவாளத்தை சேதப்படுத்துபவர்கள், தண்டவாளாத்தில் கல் வைப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications