பீகார் முதல் கட்ட தேர்தல்-அமைதியாக முடிந்தது வாக்குப் பதிவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று மிக பலத்த பாதுகாப்புடன், அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபைத் தொகுதிகளுக்கும் 6 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
தேர்தலையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.
முதல் கட்ட தேர்தலில் மொத்தமாக 1.07 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றனர். இவர்களில் 50.2 லட்சம் பெண் பெண்கள் ஆவர். மொத்தம் 10,454 வாக்குச் சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடைபெறும் மதுபானி, சுபால், கிஷன்கஞ்ச், அராரியா ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டிருந்தது. வெளியிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இன்று மாலை 5 மணியுடன்வாக்குப் பதிவு முடிவடைந்தது. பெரிய அளவில் கலவரம், வன்முறை இல்லை, அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 53 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட் மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தேர்தல் முறைகேடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதற்காக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுபானி மாவட்டத்தில் லாகா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
இந்திய-நேபாள எல்லைப் பகுதியில், சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications