மாநாடு நடத்தப் போகிறேன்-பிள்ளை குட்டிகளோடு வாருங்கள்: விஜயகாந்த் அழைப்பு
திருப்பூர்: நான் மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளேன். அப்படி நான் நடத்தும் மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பிள்ளை, குட்டிகளுடன் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே பாதுகாப்பு என்பதைப்போல் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திருப்பூரில் நேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தேமுதிக சார்பில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனியன் மில் சாலை, ஸ்ரீசக்தி தியேட்டர் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
வெளிமாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பனியன் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது. ஆனால் அந்த பனியன் தொழிலையும் நடத்த விடாமல் பஞ்சு, நூல் விலையேற்றம் காரணமாக முதலாளிகள் தொழிலை நடத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
மூலப்பொருளான பருத்தி, பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும். கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதைப் போல பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் திருப்பூர் பனியன் தொழிலை காப்பாற்ற பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலையும், சிறுமுதலாளிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை. குழந்தைகளுடன் தாய்மார்கள் இந்த மேடைக்கு முன் கூடி உள்ளார்கள். தள்ளு முள்ளு சம்பவங்களினால் பெண்கள் மயங்கி உள்ளார்கள். போலீசார் என்ன பாதுகாப்பு கொடுத்தார்கள். ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எனது கூட்டத்தை கெடுக்க பார்க்கிறார்கள்.
காசுக்கு வந்த கூட்டம் என்னிடம் இல்லை. என்னை நம்பி வந்த கூட்டம். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியை நடத்தி வருகிறேன். அத்வானி ஆட்சியில் லஞ்சம் இல்லை என்று கூறினேன். அதற்குள் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். ஆனால் அதே பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி கொடுக்க முயன்றதாக புகார்கள் வருகிறது. இந்த பணம் யாருடைய பணம். மக்களின் வரிப்பணம். பாரதீய ஜனதாவும் ஊழல் தான் செய்கிறது.
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்று எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நான் என்னை நம்பி வந்த மக்களை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கிறேன். தே.மு.தி.க.வின் கொள்கையே வறுமையை ஒழிப்போம் என்பது தான்.
விஜயகாந்துக்கு கொள்கை இல்லை என்று சொல்கிறார்கள். கொள்ளையடிக்கும் கொள்கை என்னிடம் இல்லை. ஏழைகளை சரிசமமாக நான் வாழவைக்கிறேன். நான் நடிப்பதில் சம்பாதிக்கும் பணத்தை பெண்களுக்கு தையல் எந்திரம், திருமண உதவித்தொகை, 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கி வருகிறேன்.
இங்கே கூடியுள்ளவர்களைப் பார்த்ததும் நான் மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளேன். அப்படி நான் நடத்தும் மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பிள்ளை, குட்டிகளுடன் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே பாதுகாப்பு என்பதைப்போல் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications