Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களுக்காக பாடுபட்டு வருவதை அனைவருக்கும் சொல்க-திமுகவினருக்கு கருணாநிதி அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: கலைஞர் வீடுவழங்கும் திட்டம் கிராமப் புறங்களில் பெற்றுவரும் பெரும் வரவேற்பினைக் கண்டு ஒருசில நாளேடுகளும், ஒருசில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறைகாண முடியாதா என்று ஏங்கித் தவிக்கிறார்கள். தமிழகத்தில் வாழும் மக்கள் எல்லோர்க்கும், எல்லா வசதிகளும் கிடைத்திட வேண்டும் என, இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பதை நீ அறிவாய்! நீ அறிந்ததை ஊரார்க்கும் அறிவிப்பாயாக என்று திமுகவினருக்கு கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து அவர் முரசொலியில் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதம்:

எனது இளமைக் காலத்திலேயே ஏழையெளிய பாட்டாளி மக்கள் சிறுசிறு குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்ததைப் பார்த்திருக்கிறேன். அதனால் எனது உள்ளத்தின் அடி ஆழத்தில் ஒருவகை பாதிப்பு ஏற்பட்டிருந்ததையும் உணர்ந்திருக்கிறேன்.

அருமை அண்ணன் ஜீவா எழுதிய, "காலுக்குச் செருப்புமில்லை; கால்வயிற்றுக் கூழுமில்லை; பாழுக்குழைத்தோமடா-என் தோழனே; பசையற்றுப் போனோமடா'' என்று; தொழிலாளர்கள்-விவசாயிகள் மத்தியில் அந்தக் காலக்கட்டத்தில் பிரசித்திப் பெற்ற பாடல் என் இதயத்திற்குள் புகுந்து ஏற்படுத்திய அதிர்வுகள் சொல்லொணாதவை. அந்தப் பாடலில், ஒண்டக் குடிசையில்லை- என் தோழனே; உழைத்திளைத்துப் போனோமடா'' என வரும் வரி; ஏழையெளிய பாட்டாளி மக்கள் வாழ்வதற்கு குடிசைகளுக்குக்கூட படும் அவதியை படம்பிடித்துக் காட்டியது.

மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் இன்றியமையாத அடிப்படை தேவைகளாகும். உணவு என்பது அன்றாடம் எழும் தேவையாகும்; உடை என்பது ஆண்டுதோறும் எழும் தேவையாகும்; உறைவிடம் என்பது நிரந்தரத் தேவையாகும். ஒருமுறை உறைவிடம் ஒன்றை உருவாக்கிவிட்டால், வாழ்நாள் முழுதும் அந்தத் தேவையை நிறைவு செய்வதோடு, வாழ்நாளுக்குப் பிறகும் மரபுரிமையினர்க்கு அந்தத் தேவையை நிறைவு செய்திடப் பயன்படுவதாகும்.

உறைவிடத்தைப் பற்றிய இந்த உண்மையும்; அதிலும் குறிப்பாக-ஏழையெளிய பாட்டாளி மக்கள் - விவசாயிகள்-விவசாயக் கூலிகள் ஆகியோருக்கு பாதுகாப்பான உறைவிடம் என்பது எட்டாக் கனியாக இருந்துவரும் நிலையும்; இளமைக் காலத்தில் எனது உள்ளத்திலே ஏற்பட்ட உணர்வுகளும்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், ஏழையெளியோர்க்குப் பாதுகாப்பான உறைவிடம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி என்னைச் சிந்திக்கத் தூண்டின.

அதன் விளைவாகத் தான், ஓலைக் குடிசையிலேயே வாழ்ந்துவரும் ஏழையெளிய பாட்டாளி மக்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், ஆதிதிராவிட சமுதாயத்தினர்க்கும், இலவசமாக கான்கிரீட் வீடுகள் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

"புறக்கணிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளைச் சமூகத் தொண்டர் ஒரு சிலரால் மட்டுமே சீர்படுத்த முடியாது. நகரத்திற்குள்ளும் அந்த எல்லைகளை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளின் நிலைமைகளையும் மாற்ற வேண்டுமானால், அரசே முன்னின்று சிந்தித்துப் பெரிய அளவில் திட்டம் தீட்டிச் செயற்படுத்தினால் மட்டுமே சீராகும்'' என்ற பேரறிஞர் அண்ணா அறிவுரையை மனதில் கொண்டு, 1970-ம் ஆண்டு கழக அரசினால் தொடங்கப்பட்டதுதான் "தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்''.

இது ஏழை, நடுத்தர மக்களின் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் இதுவரை 68 ஆயிரத்து 236 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, குடிசைவாசிகளுக்குத் தரப்பட்டுள்ளன. குடிசைவாசிகள் மீது அ.தி.மு.க. ஆட்சி காட்டிய அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டொன்றைச் சொல்ல வேண்டுமென்றால், 20 ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் குடிசைவாசிகளுக்குக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மொத்தம் 38 ஆயிரம்தான். இதை, கழக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

சென்னை அடையாறு ஊரூர்ப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அண்ணல் ஜெயப்பிரகாஷ் நாராயண் "காந்தியடிகள் கண்ட கனவினை முதல்வர் கலைஞர் நனவாக்கியதை எண்ணிப் பரவசம் அடைகிறேன்; பாராட்டுகிறேன்; போற்றுகிறேன்'' என்று புகழ்ந்துரைத்தது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!

ஆண்டாண்டு காலமாக, மண் குடிசைகளில் வாழ்ந்து வரும் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அடித்தளம் அமைக்கும் சீரிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் "ஆதிதிராவிடர் இலவச வீட்டுவசதிக் கழகம்'' 1974-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்படி, ஓட்டு வீடுகளே கட்டப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு கழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கான்கிரீட் வீடுகள் கட்ட ஆணையிட்டது.

இத்திட்டம் தான், இந்திரா வீட்டுவசதித் திட்டம் என மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுதும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், கழக அரசினால், இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன;

ஆனால், ஜெயலலிதா அரசின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 3 இலட்சத்து 86 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன; அதாவது கழக அரசில் கட்டப்பட்டதில் பாதி அளவுக்குத்தான் ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பட்டது என்பதிலிருந்து; ஆதிதிராவிட சமுதாயத்திற்கு இன்றைக்கு வக்காலத்து வாங்குகின்ற வாய்ஜாலக்காரர்கள் ஆதிதிராவிடர் நலனில் கொண்டிருந்த ஈடுபாட்டின் அளவை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்!

மத்திய அரசில் உணவு அமைச்சராக திகழ்ந்த பாபு ஜகஜீவன்ராம் 1979-ம் ஆண்டு ஜனவரியில் செங்கற்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அரிசன வீட்டுவசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்து வைத்து உரையாற்றியபோது, "மக்கள் நல அரசு என்ற வார்த்தைக்கு உண்மையான விசுவாசத்துடன் தமிழக அரசு பணியாற்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக இந்த வீடுகளை அரிசனச் சகோதரர்களுக்கு வழங்குவது என்று தமிழக முதல்வர் கலைஞர் முடிவு செய்திருப்பது அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன் உதாரணத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக!'' என்று பாராட்டியது இன்றைக்கும் பழைய நாளேடுகளில் அப்படியே உள்ளன. பழைய நாளேடுகளில் உள்ள இந்த மணிவாசகங்கள் இன்றலர்ந்த மலர்களைப் போல் என் மனதில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றன!

மீனவ சமுதாயத்தினர்க்கு இலவச வீடுகள் கட்டித் தரவேண்டும் எனும் நோக்கில்; 1975-ம் ஆண்டு கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான் "மீனவர் இலவச வீட்டுவசதித் திட்டம்''. இந்தத் திட்டம்தான் பின்னர் 1996-ல், மீனவர் சமுதாய மேதை, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பெயரில்-சிங்கார வேலர் நினைவு இலவச மீனவர் வீட்டுவசதித் திட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 53 ஆயிரத்து 413 மீனவக் குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

இதில், பாதிக்கு மேல், அதாவது 28 ஆயிரத்து 174 வீடுகள் கழக ஆட்சியில் கட்டப்பட்டவை. மேலும், 8,495 வீடுகள் தற்போது மீனவர் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கட்டப்பட்டு வருகின்றன.

இத்தகைய திட்டங்களின் தொடர்ச்சியாகவே, தற்போது "கலைஞர் வீடுவழங்கும் திட்டம்'' என்ற திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிநாதமாக இருக்கும் குறிக்கோளே, "குடிசைகள் இல்லாத கிராமங்கள்'' என்ற நமது நீண்டநாள் கனவை, நனவாக்கி, ஏழையெளியோர் வாழ்வில் நிம்மதியைத் தரவேண்டும் என்பதுதான்.

21.1.2010 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில், "இந்த அரசு மகத்தான சாதனைகள் புரிந்துள்ள போதிலும், மாநிலமெங்கும் ஏழை எளியோர் மண் சுவர்களால் ஆன கூரை வீடுகளில் வசித்து வருவதால், இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளும் துயர்மிகு நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், நமது மாநிலத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 21 லட்சம் என அறியப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசின் நிதியுதவியுடன் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின்கீழ் மட்டும் இக்குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.

2010-2011-ம் ஆண்டு தொடங்கி, இந்த திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகாலத்தில் மண் சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக, நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித்தரப்படும். இத்திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதியாண்டில் மூன்று லட்சம் நிரந்தர வீடுகள் கட்டப்படும்'' என்று அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக; 15.8.2010 அன்று நான் ஆற்றிய சுதந்திரத் திருநாள் உரையில், "இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் ஒவ்வொரு கான்கிரீட் வீட்டிற்காகவும் அரசின் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்; திருச்சி மாநகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவின்போது என்னிடம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, மேலும் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் 75 ஆயிரம் ரூபாய் வீதம் மானியமாக வழங்கிட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓட்டைக் குடிசையிலே-ஒன்றரைச் சாண் பாயிலே-கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்- வாடிக்கிடந்த மக்களுக்கு வாழ்வில் விடிவளிக்கும் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைப்பதில் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளம் நிறைந்தது போன்ற உணர்வைப் பெறுகிறேன்'' என்று எனது உள்ளத்தில் பொங்கியெழுந்த உணர்வுகள் இரண்டறக் கலந்த அறிவிப்பினை வெளியிட்டேன்.

தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளிலும், ஒரே நேரத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு; ஒவ்வொரு வீடும் 207 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களான சிமெண்டு மற்றும் இரும்புக் கம்பிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் குறைந்த விலையில் அரசே வழங்குகிறது.

வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் ஒரு மூட்டை சிமெண்டு 210 ரூபாய் வீதம் 60 மூட்டை சிமெண்டு வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்கு தேவைப்படும் 155 கிலோ கம்பி, சராசரியாக கிலோ 36 ரூபாய் என்ற விலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக, வெளிச்சந்தையில் சிமெண்டு மற்றும் இரும்புக் கம்பிகளின் விலை உயர்ந்தாலும், "கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்'' பயனாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், செங்கற்களின் விலை உயர்வினைத் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்திலுள்ள செங்கற்சூளை உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, வெளிச்சந்தை விலையை விட குறைவான விலைக்கு செங்கற்கள் கிடைத்திடச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணல் மற்றும் ஜல்லிக் கற்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் அல்லது வெளிச்சந்தை விலையை விட குறைத்துப் பெறுவதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்துள்ளார்கள். இவை தவிர, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நல நிறுவனத்தின் மூலம் செங்கற்சூளைகள் அமைப்பதற்கு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவியும், கட்டிடத் தொழிலாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது. மணல் மற்றும் ஜல்லிக் கற்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் அல்லது வெளிச்சந்தை விலையைவிடக் குறைத்துப் பெறுவதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தக்க நடவடிக்கையினை எடுத்து வருகிறார்கள்.

நாடெங்கும் வீடுகட்டும் பணிகள் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு சில இடங்களில் வீடுகட்டும் பணி நிறைவு பெற்றிருக்கிறது. 10.10.2010 அன்று திருவாரூர் செல்லும் வழியில், சிதம்பரத்திற்கு அருகே வல்லம்படுகை என்ற கிராமத்தில் "கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின்'' கீழ் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டையும், வீட்டுச் சொந்தக்காரர் கொண்ட கழிபேருவகையினையும், கண்ணாரக் கண்டு அவர்களை மனமார வாழ்த்தினேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளின் புகைப்படங்களைக் காட்டி; வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். 2011, ஜனவரி மாதத்திற்குள் மூன்று லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, ஏழையெளியோர் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளுக்கு உரிமையாளர்கள் என்ற சமுதாய அந்தஸ்தினைப் பெற்று, பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்வார்கள்.

"கலைஞர் வீடுவழங்கும் திட்டம்'' கிராமப் புறங்களில் பெற்றுவரும் பெரும் வரவேற்பினைக் கண்டு ஒருசில நாளேடுகளும், ஒருசில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறைகாண முடியாதா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.

"எல்லோர்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்றதிந்த வையம்'' எனப் புரட்சிக்கவிஞர் பாடியதுபோல், தமிழகத்தில் வாழும் மக்கள் எல்லோர்க்கும், எல்லா வசதிகளும் கிடைத்திட வேண்டும் என, இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பதை நீ அறிவாய்! நீ அறிந்ததை ஊரார்க்கும் அறிவிப்பாயாக என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+