இன்ஸ்டா பிரபலங்கள், நடிகைகளின் தோற்றத்தை மாற்றும் மௌஞ்சாரோ, ஓசெம்பிக்.. அறிய வேண்டிய உண்மை
சென்னை: மௌஞ்சாரோ அல்லது ஓசெம்பிக். 600 ரூ - 1800 ரூபாய் ஒரு ஷாட். மாதம் 4. மூன்று மாதத்தில் உடல் எடை குறைந்து புதிய மனிதராக உருமாறி விடுவீர்கள். உணவின் மீது நாட்டம் குறையும். இயற்கையாக உடல் எடை குறையும். பக்க விளைவுகள் இல்லை. ஒரு பதிவினை பார்க்க முடிந்தது.. பல யூடியூபர்கள், நடிகர், நடிகைகள் இப்படி உடல் எடையை குறைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இதில் விலையும் தவறு.. இதனை பயன்படுத்துவது மட்டுமின்றி, நிறுத்துவதிலும் பேராபத்தும் உள்ளது. அதுபற்ற விரிவாக பார்ப்போம்.
மௌஞ்சாரோ அல்லது ஓசெம்பிக் 600 ரூ - 1800 ரூபாய் ஒரு ஷாட் என்பது மிகப்பெரிய பொய் என்கிறார்கள் மருத்துவர்கள் ஓசெம்பிக் (Ozempic) அல்லது மொஞ்சாரோ (Mounjaro) ஆகியவை அதிநவீன சர்வதேச மருந்துகள். இந்தியாவில் ஒரு வாரத்திற்கு ஊசி போட 0.25 மில்லி கிராமிற்கு ₹5660 ஆகும். எனவே ₹600 முதல் ₹1800 ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.

அதேபோல் மௌஞ்சாரோ அல்லது ஓசெம்பிக் பயன்படுத்தினால் வெறும் மூன்று மாதத்தில் எடை குறையும் என்பது உண்மைதான் என்று கூறும் நிபுணர்கள், ஆனால் அந்த மருந்தை நிறுத்திய அடுத்த சில மாதங்களிலேயே இழந்த எடை அனைத்தும் மீண்டும் வந்துவிடும். வாழ்நாள் முழுக்க இந்த ஊசியைப் போட்டுக் கொண்டே இருக்கவே முடியாது.
உடலின் ஹார்மோன் சமநிலையை ஒரு செயற்கை ஊசி மூலம் மாற்றி, மூளையை ஏமாற்றி, பசியைக் கட்டாயப்படுத்தி அடக்குவது எப்படி இயற்கையான வழியாகும்? இது முற்றிலும் செயற்கையான ஒரு மருத்துவ முறை தான் இந்த மருத்துவ முறை.. "பக்க விளைவுகள் இல்லை" என்று சமூக வலைதளங்களில் பரவுவது மிகவும் ஆபத்தான பொய் ஆகும். ருத்துவ உலகமே ஓசெம்பிக் மற்றும் மொஞ்சாரோவின் பக்கவிளைவுகளைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பக்கவிளைவுகள் இல்லை என்று பலரும் கூறுவது அறியாமை ஆகும்.
கடுமையான குமட்டல், வாந்தி, தொடர் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவை சாதாரண பக்க விளைவுகள் ஆகும். தீவிரமான ஆபத்துகளும் அதிகமாகவே உள்ளது. கணைய அழற்சி , சிறுநீரகச் செயலிழப்பு, பித்தப்பை கற்கள் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இதன் மருத்துவ எச்சரிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓசெம்பிக் பயன்படுத்தினால் மிக வேகமாக முகத்தில் உள்ள கொழுப்பு குறைவதால், முகம் சுருங்கி, வயதான தோற்றம் உடனே வந்துவிடும் என்கிறார்கள். முறையான உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மட்டும்தான் பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான ஒரே வழியாகும்.
உலகப் புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழ்களும் , அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும் (US-FDA) இந்த மருந்துகள் குறித்து ஆய்வு செய்து பிரச்சனைகளை பட்டியலிட்டுள்ளன. உலகின் மிக உயரிய மருத்துவ இதழ்களில் ஒன்றான ஜாமா 2024 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் முடிவில்'தீர்சிபடைடு' (Tirzepatide - மொஞ்சாரோ மருந்தின் வேதிப்பொருள்) ஊசியைப் பயன்படுத்தி 8 மாதங்கள் எடையைக் குறைத்தவர்களை, அடுத்த ஒரு வருடம் அந்த ஊசியை நிறுத்தச் செய்து கண்காணித்தனர். அவர்களின் ஆய்வில் ஊசியை நிறுத்திய அடுத்த சில மாதங்களிலேயே, அவர்கள் இழந்த எடையில் 14% க்கும் அதிகமான எடையை மீண்டும் பெற்றது தெரியவந்தது.
அமெரிக்காவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மருந்துகளின் அட்டையிலேயே எச்சரிக்கையை அச்சிட உத்தரவிட்டிருக்கிறது. எலி மற்றும் விலங்கின சோதனைகளில் இந்த மருந்துகள் 'தைராய்டு சி-செல் கட்டிகளை உருவாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு புற்றுநோய் இருந்தால் இந்த மருந்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த ஊசியைப் பயன்படுத்துபவர்களுக்குக் கடுமையான கணைய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் உலக சுகாதார நிறுவனம் ஒரு சர்வதேச எச்சரிக்கையை விடுத்தது. உலகளவில் ஓசெம்பிக் மருந்துக்குக் தட்டுப்பாடு நிலவுவதால், ஆன்லைனிலும் சில கடைகளிலும் "போலி ஓசெம்பிக்" ஊசிகள் விற்கப்படுவதாக எச்சரித்தது இந்த போலி ஊசிகளில் வெறும் தண்ணீரோ அல்லது இன்சுலினோ கலக்கப்பட்டிருக்கலாம் என்றும், இன்சுலின் அளவு அதிகமானால் உடனே சர்க்கரை அளவு குறைந்து கோமாவுக்குச் செல்லவோ, உயிரிழக்கவோ நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
'ஓசெம்பிக் ஊசி கொழுப்பை மட்டும் கரைப்பதில்லை, நம் உடலில் உள்ள ஆரோக்கியமான தசைகளையும் சேர்த்தே கரைத்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் உடல் பலவீனமடைவதோடு, முகத்தில் உள்ள சதை வற்றிப்போய், 30 வயது நபர் 50 வயது நபர் போலக் காட்சியளிக்கும் 'ஓசெம்பிக் முகம்' என்ற பாதிப்பு ஏற்படுவதாக NEJM இதழ் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ இதழ்களின்படி, இந்த மருந்துகள் "உடல் பருமன் மற்றும் தீவிர சர்க்கரை நோய்" உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டியவை ஆக உள்ளது. ஆனால் அழகுக்காகவோ, உடற்பயிற்சி செய்யச் சோம்பேறித்தனப் பட்டோ, மருத்துவர் ஆலோசனையின்றி விளம்பரங்களைப் பார்த்துவிட்டுப் பயன்படுத்தக் கூடிய "அழகு சாதனப் பொருளாக" இது இன்ஸ்டா இன்புளுயன்சர்களால் பயன்படுத்துப்படுவதுடன், பரப்பப்படுவது உண்மையிலேயே ஆபத்தானது..














Click it and Unblock the Notifications