40°C-க்கே உருகும் பிரிட்டன் சாலைகள்.. 45°C-க்கும் மேல் தாங்கும் இந்திய சாலைகள்.. ரகசியம் என்ன?
லண்டன்: ஐரோப்பாவை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பிரிட்டன் நாட்டில் 40 டிகிரி வெப்பத்திற்கே அந்நாட்டின் சாலைகள் உருகிவிடுகின்றன. இந்தியாவில் 45 டிகிரி செல்சியஸை தாண்டும் போதும், சாலைகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத நிலையில், பிரிட்டனில் 40 டிகிரிக்கே சாலைகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது.
பொதுவாக நம்ம ஊரில் கோடைக் காலத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும் பல பகுதிகளில் படுத்தி எடுக்கும் மக்கள் வெளியே செல்லக்கூட முடியாத சூழலே இருக்கும். 42 டிகிரி வரை தமிழகத்தில் வெப்பம் போய் இருக்கிறது. இந்தியாவின் ஓரிரு பகுதிகளில் இன்னுமே மோசமாக 45 டிகிரி வரை கூட வெப்பம் போய் இருக்கிறது. ஆனால், இவ்வளவு வெப்பம் அடித்தாலும் உள்கட்டமைப்பு சேதம் அடைந்தது இல்லை.

இந்திய சாலைகள்
ஆனால், இப்போது பிரிட்டன் நாட்டில் 40 டிகிரி வெப்பத்திற்கே சாலைகள் உருகிவிடுகிறதாம். பல உள்கட்டமைப்பு சேதம் அடைகிறதாம். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் எதுவுமே ஆகாமல் இருக்கும் சாலைகள் பிரிட்டனில் மட்டும் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
காரணம் என்ன!
இந்த வீடியோவை வைத்து சிலர், சாலைகளின் தரம் குறித்துப் பேசி வருகிறார்கள். ஆனால், விஷயம் அது இல்லை. எப்போதும் ஒரு இடத்தில் சாலை அமைக்கும்போது அந்த பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவே சாலைகளை அமைப்பதற்கானப் பொருட்களைத் தேர்வு செய்வார்கள். பிரிட்டன் போன்ற நாடுகளில் நமது நாட்டை விடப் பல மடங்கு குளிர் அதிகமாக இருக்கும் மாதங்கள் வரும். எனவே, அந்த கடும் குளிரைத் தாங்கும் வகையிலேயே சாலைகள் அமைக்கப்படும். உறைபனி மற்றும் பனி உருகுதல் போன்ற காலங்களில் சாலைகளில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்து சாலை போடும் பொருட்களைத் தேர்வு செய்வார்கள்.
ஐரோப்பிய நாடுகள்
இதனால் பல ஐரோப்பிய சாலைகளில் ஹாட்-ரோல்டு ஆஸ்பால்ட் மற்றும் அடர்த்தியான ஆஸ்பால்ட் கான்கிரீட் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கலவைகளில் தார் மற்றும் மிக நுண்ணிய ஜல்லிக்கற்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதால், சாலையின் பரப்புக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது. இதனால் குளிர்காலத்தில் சாலைகள் எளிதில் விரிசலடையாமல் சுருங்கி விரிவடையும். வெப்பம் ஜீரோவுக்கு கீழ் போகும்போதும் இந்த சாலைகளில் பெரிய பாதிப்பு ஏற்படாது.. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது.
40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது, இந்த ஆஸ்பால்ட் கலவைகளில் உள்ள தார் உருகி மென்மையாகத் தொடங்குகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டில் வழக்கமாக எந்த வெப்பம் இருக்குமோ.. அதை மனதில் வைத்தே சாலைகளை அமைப்பார்கள். ஆனால், இந்த முறை அதீத வெப்பம் நிலவுவதால் இப்படி சாலையே உருகிவிட்டது.
இந்தியா
இந்தியாவை பொறுத்தவரை இங்கு வெயில் காலமே பல மாதங்கள் நீடிக்கும். இதைக் கருத்தில் கொண்டு விஜி-30 (VG-30) மற்றும் விஜி-40 (VG-40) போன்ற கடினமான தார் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வெப்பம் கணிசமாக உயரும்போது கூட தங்களின் வலிமையைத் தக்க வைத்துக் கொள்கின்றன. மேலும், இந்தியச் சாலைக் கலவைகளில் பெரிய அளவிலான ஜல்லிக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கடுமையான வெப்பத்திலும் சாலையின் மேற்பரப்பை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
எனவே, இது தரத்தைப் பற்றியது இல்லை.. ஐரோப்பிய சாலைக் கட்டமைப்பு என்பது உறைபனி குளிர்காலத்தைத் தாங்கும் வகையில் போடப்பட்டவை.. மறுபுறம் இந்தியச் சாலைகள் இயல்பாகவே வெப்பத்தைத் தாங்கும் வகையில் போடப்பட்டவை. இதன் காரணமாகவே அதீத வெப்பத்தைப் பிரிட்டன் சாலைகளால் தாங்க முடியவில்லை!














Click it and Unblock the Notifications