கோவை இரட்டைக் கொலை எதிரொலி-கால் டாக்சிகளைப் பதிவு செய்ய போலீஸ் உத்தரவு
கோவை: இரண்டு அப்பாவிப் பள்ளிக் குழந்தைகளை கொடூரமாகக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் ஓடும் அனைத்து கால் டாக்சிகளையும் உடனடியாக பதிவு செய்யுமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை பள்ளிக் குழந்தைகளான முஷ்கின் மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகியோரை கடத்திச் சென்று தண்ணீரில் தள்ளி விட்டுக் கொன்றதோடு, முஷ்கினை பாலியல் பலாத்காரம் செய்தும் கொடூரமாக நடந்து கொண்ட கால் டாக்சி டிரைவர்களான மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கோவையில் இயங்கும் கால் டாக்சிகளைப் பதிவு செய்து தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது காவல்துறை.
கால்டாக்ஸி நிறுவனங்கள் தங்களது கால்டாக்ஸிகள், அதன் ஓட்டுநர்கள் குறித்த விவரங்களை அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கால்டாக்ஸி நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தும் டிரைவர்கள் குறித்த முழுவிவரங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். போலீஸார் வந்து கேட்கும்போது டிரைவர்களின் முழுவிவரங்களைத் தெரிவிப்பது அவசியம். இந்த விவரங்கள் சேகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கும். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களின் டிரைவர்களை நியமிக்கும்போதும், அவர்களது முழுவிவரங்களை பள்ளி நிர்வாகங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டிரைவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். டிரைவர்களின் பின்புலம் குறித்து தெரிந்து கொள்ளத் தேவையான உதவிகளைச் செய்ய போலீஸார் தயாராக உள்ளனர்.
குழந்தைகளை கால்டாக்ஸி, ஆட்டோ போன்ற தனியார் வாகனங்களில் அனுப்பும் பெற்றோர் கவனத்துடன் இருப்பது அவசியம். டிரைவர்களின் அணுகுமுறை, குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், குழந்தைகள் டிரைவர்களைப் பற்றி ஏதாவது கூறுகிறார்களா என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்க உள்ளோம். மாநகரக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு இக் கூட்டம் நடைபெறுகிறது. கோவை நகரில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஆணையர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் கைதிகள் ஆவேசம்:
இந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகள் குறித்தும் சிறையில் உள்ள பிற கைதிகள் கடும் ஆவேசத்துடன் உள்ளனர்.
இருவரையும் நேற்று காலை போலீஸார் சிறைக்குக் கொண்டு வந்தபோது அவர்களைப் பார்த்து கைதிகள் ஆவேசமாக குரல் எழுப்பினர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் இருவரையும் சிறை வார்டர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.
இருவரையும் தற்போது தனித் தனி அறைகளில் அடைத்து வைத்துள்ளனர். யாரும் அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
மோகனை அடையாளம் பார்த்த பாட்டி:
குழந்தைகள் முஷ்கின் மற்றும் ரித்திக்கின் பாட்டி கமலா பாய், மோகனகிருஷ்ணன், காரில் குழந்தைகளை கடத்திச் சென்றதை நேரில் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரின் புகைப்படங்களை போலீஸார் காட்டி அடையாளம் கூறச் சொன்னபோது மோகனகிருஷ்ணனை சரியாக அடையாளண் காட்டினார்.
விரைவில் சிறைக்கு அவரை அழைத்துச் சென்று அடையாள அணிவகுப்பை போலீஸார் நடத்தவுள்ளனர்.
பச்சைக் குழந்தைக்குத் தந்தையான மோகனகிருஷ்ணன்
கொடூரமாக நடந்து கொண்டு இரு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ள மோகனகிருஷ்ணனின் பூர்வீகம் கேரளாவாகும். இவனது மனைவி பிரியா. இவர் நர்ஸாக உள்ளார். இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்புதான் ஹரிணி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவனாம் மோகன கிருஷ்ணன். கைதாகி போலீஸாரிடம் சிக்கியபோது காவல் நிலையத்தில் வைத்து, எனது குழந்தை மீது எனக்கு அதிக பாசம் உள்ளது. அவளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கதறி அழுதானாம்.
இன்னொருவனான மனோகரனும் டிரைவர்தான். கஞ்சாவுக்கு அடிமையானவன். மோசமான நடத்தை கொண்டவன் என்பதால் மனைவி இவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார்.
இவன்தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் ஐடியாவை மோகனகிருஷ்ணனுக்குக் கொடுத்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே இதுபோன்ற குழந்தை பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீஸாருக்கு சந்தேகம் உள்ளது. விரைவில் இருவரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications