தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்-மக்கள் மறியல்:நடவடிக்கை கோரும் சிபிஎம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தலித் இளைஞர்களை தாக்கிய காவல்துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சி.பி.எம். கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஐ.வி. நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்டு பின் அது மோதலாக மாறியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முத்துப்பேட்டை போலீசார் தலித் சமூகத்தைச் சேர்ந்த கார்த்தி, மணிமாறன், சேதுபதி, பிரவீன் குமார் ஆகியோரை மட்டும் வேனில் ஏற்றியுள்ளனர். இதை எதிர்த்து அங்கிருந்த பெண்கள் போலீசார் வாகனத்தை மறித்துள்ளனர். ஆனால் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வேனை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், போலீசார் மோதலில் தொடர்புடைய உண்மையான நபர்களை பிடிக்காமல், வேனில் ஏற்றிச் சென்ற தலித் இளைஞர்களை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த நால்வரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பிரச்சனையில் போலீசார் முற்றிலும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளனர்.
மேலும், தலித் இளைஞர்களை தாக்கி காயப்படுத்திய முத்துப்பேட்டை உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications