ஜெயலலிதா தயாராக இருந்தால் காவிரிப் பிரச்சினை தீர்ந்த மாதிரிதான்-கருணாநிதி

சட்டசபையில் நேற்று, துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காவிரிப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அரசைக் குறை கூறி அவர் பேசினார். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
இந்த காவிரிப் பிரச்சினை - அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த 1967-68-லேயிருந்து ஆரம்பமாகி, இதுவரையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணாவுக்குப் பிறகு நான் - எனக்குப் பிறகு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். - இடையிடையே நம்முடைய பன்னீர்செல்வம் போன்றவர்கள் - அடுத்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் அதற்கடுத்து பல ஆண்டுகாலமாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது.
அதைப்பற்றி நாம் நடத்துகிற விவாதமும் தீராமல் இருக்கிறது. நேற்றைக்குக்கூட இங்கே பேசும்போது சொன்னார்கள் - ஒருவருக்கொருவர் - இரண்டு கட்சிகளும் குற்றஞ்சாட்டுவதிலே பொழுது போக்குவதைத் தவிர, பிரச்சினைகளைத் தீர்ப்பதிலே ஒன்றாகக் கலந்து முடிவு செய்யவில்லை என்பதை எடுத்துச் சொன்னார்கள்.
அதைச் செய்வதற்கு, எதிர்க்கட்சித் துணைத் தலைவரை நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம் - அவர்களும், அவர்களுடைய கட்சித் தலைமையிடத்திலே அனுமதி பெற்று, எனக்கு ஒப்புதல் தருவார்களேயானால், மிக நன்றாக இருக்கும்.
எதற்கென்றால், இந்தப் பிரச்சினையைப் பற்றி சட்டசபையிலும், வெளியிலும் ஒருவருக்கொருவர் ஏடாகூடமாக, ஏட்டிக்குப் போட்டி என்ற முறையிலே பேசி -இது கர்நாடக அரசுக்கு ஒரு புதிய தெம்பை உருவாக்குவதற்கு மாறாக, நாம் நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு ஏதுவாக, தினமும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பொது மேடையிலும் அல்லது சட்டமன்றத்திலும் பேசி, யார் செய்தது சரி? யார் வழக்கை நடத்தியது சரி? யார் வழக்கை ஒத்தி வைத்தது சரி? என்றெல்லாம் விவாதிக்காமல், ஒன்றாக உட்கார்ந்து, அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும் மீண்டும் ஒருமுறை உட்கார்ந்து பேசி நமக்குள்ளே யார் அதற்கு காரணம் என்பதை தீர்மானித்து, ஒரு முடிவெடுப்பது நல்லதாக இருக்கும். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தயாராக இருந்தால், காவிரிப் பிரச்சினை தீர்ந்த மாதிரிதான் என்றார்.
பின்னர் மீண்டும் பன்னீர் செல்வம் பேசியபோது மறுபடியும் குறுக்கிட்ட முதல்வர்,
உட்கார்ந்து பேசுவோம்; இங்கு அல்ல. சட்டமன்றத்திலே இருக்கின்ற கட்சிகளுடைய தலைவர்களுடன் உட்கார்ந்து பேசுவோம். தேவைப்பட்டால், வெளியிலே இருக்கின்ற தலைவர்களைக் கூட, அந்த கூட்டத்திற்கு அழைப்போம்.
நீங்கள் என்ன யோசனைகளைச் சொல்கிறீர்களோ, அந்த யோசனைகள் வெற்றி பெறுமா; வெற்றி பெறாதா? அது நிறைவேறுமா; நிறைவேறாதா? என்பதையெல்லாம் இருசாராரும் சிந்திப்போம்; அதைப்பற்றி விவாதிப்போம். இறுதியாக எடுக்கின்ற முடிவின்படி, அரசு தனது கடமையை ஆற்றும் என்றுதான் நான் சொன்னேன் என்று விளக்கினார் முதல்வர்.












Click it and Unblock the Notifications