பொதுமக்களைக் கடுப்பேற்றிய வெங்காயம் - பூண்டு விலை!

அது, ஆண் - பெண் பேதமின்றி வெங்காயத்தையும் வெங்காயத்தை விற்றவர்களையும் கடுமையாக சாடியது!
இன்று வெங்காயத்தின் விலை அதன் உச்சத்தைத் தொட்டது. சில இடங்களில் கிலோ ரூ 55-ம், பெரிய மொத்தவிலைக் கடைகளில் சிறிய ரகம் ரூ 48-க்கும், பெரிய ரகம் ரூ 52-க்கும் விற்கப்பட்டது.
இதில், நொந்து போன நடுத்தர மக்கள்தான் தங்கள் கோபத்தை வசவுகளாக வெளிப்படுத்திச் சென்றனர்.
கடந்த மாதம் வரை கிலோ 15 ரூபாய்க்கு விற்றது வெங்காயம். இந்தியாவில் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. பெங்களூர், பகல்கோட், பிஜப்பூர், தால்வாட், கடாக், சித்ரதுர்கா, தேவாங்கர், கடாக் ஆகிய மாவட்டங்கில் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தியாகிறது.
கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது.
சமீபத்தில் பெய்த மழையால் வெங்காய பயிர்களில் தண்ணீர் தேங்கி பெருமளவு பயிர்கள் நாசமாகிவிட்டன. விளைந்து இருந்த வெங்காயமும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்டன.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெங்காய உற்பத்தியே இல்லாத நிலை. இதன் விளைவு வரும் நாட்களில் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.60 - 70 வரை போகலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூண்டு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெளியூர்களில் கிலோ ரூ 170 வரை விற்கப்படும் பூண்டு, சென்னையில் ரூ 200 முதல் 220 வரை விற்கப்படுகிறது. அதுவும் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பொதுவாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அசைவப் பிரியர்களின் தினம். வெங்காயமும் பூண்டும் நிறையவே தேவைப்படும் அன்றைக்கு. ஆனால் விலை உச்சத்திலிருந்ததால், வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து, கூடவே சாபத்தையும் கொடுத்து வாங்கிச் சென்றனர் பொதுமக்கள்!












Click it and Unblock the Notifications