''வரும்.. ஆனா வராது..''!!
சென்னை: காங்கிரஸ் எங்களுடன் வந்து விடும் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வந்த அதிமுகவுக்கும், அதிமுக ஆதரவு மீடியாக்களுக்கும் 'நோஸ் கட்' கொடுப்பது போல அமைந்துவி்ட்டது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று மு.க.அழகிரி மகன் திருமணத்தில் பேசிய பேச்சு.
காங்கிரஸ் வரும் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதற்கும் ஒரு படி மேலே போய், ராஜாவை நீக்குங்கள், அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றால், நான் தேவையான ஆதரவைத் திரட்டித் தருகிறேன் என்றும் கூறினார்.
ஆனால் உடனடியாக இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது காங்கிரஸ். அதேசமயம், ஜெயலலிதாவின் 'பாலிடிக்ஸை' முறியடிக்க அதிரடியாக செயல்பட்ட முதல்வர் கருணாநிதியும், ராஜாவை ராஜினாமா செய்ய வைத்தார்.
ராஜா ராஜினாமா செய்ததே முதலில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத விஷயம்தான். ராஜா விலகவும் கூடாது, அதேசமயம், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தபடி இருக்க வேண்டும். அதை வைத்து காங்கிரஸைக் குழப்பி, திமுகவை விட்டு அதை விலக்க வேண்டும் அல்லது திமுகவே, காங்கிரஸிடமிருந்து விலகிப் போக வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது.
ஆனால் இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்திருந்த காரணத்தால்தான் கொளுந்து விட்டு எரிந்த நெருப்பில், 'லைட்'டாக ஒரே ஒரு சொட்டுத் தண்ணீரை ஊற்றி முற்றிலும் அனைத்து விட்டார் கருணாநிதி. இப்போது கூட்டணிக்குள் புகையும் இல்லை, புகைச்சலும் இல்லை. இதைத் தான் பிரணாப் முகர்ஜியின் நேற்றைய மதுரைப் பேச்சு விளக்குவதாக அமைந்தது.
முதல்வர் கருணாநிதியையும், அவரது முக்கியத்துவத்தையும், அவரது செயல்பாட்டையும் வெகுவாகப் பாராட்டினார் பிரணாப். அத்தோடு நில்லாமல் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்திருப்பதால் நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியும் ஏற்படும் என்றும் கூறினார். முத்தாய்ப்பாக, இன்று உள்ள இந்தக் கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் என்றும் கூறி விட்டார்.
இது பிரணாபின் பேச்சாக மட்டும் இருக்காது, நிச்சயம் சோனியா காந்தியின் கருத்தாகவும் இருக்கும் என்பதால் ராஜா விவகாரத்தால் சற்றே தளர்ந்து போயிருந்த திமுக தரப்பு முற்றிலும் குஷியாகியுள்ளது.
ஆனால், பிரணாபின் பேச்சால் அதிமுக தரப்பு கடும் எரிச்சலடைந்துள்ளது. காங்கிரஸ் நம் கூட்டணிக்குள் வரும் என்று கூறிக் கூறித்தான் திருச்சியிலும், மதுரையிலும் பெரும் கூட்டத்தைக் கூட்டினார் ஜெயலலிதா. வந்துடும் போலிருக்கே என்று அதிமுகவினரும் நம்ப ஆரம்பித்தனர். நடுநிலை பொதுமக்களும் கூட கூட்டணியில் மாற்றம் வரும் போலிருக்கே என்று நினைக்க ஆரம்பித்தனர். அதிமுக ஆதரவு மீடியாக்கள் வழக்கம்போல காங்கிரஸ் வரப் போகிறது என்ற ரீதியில் செய்திகள் வெளியிட்டனர்.
இதையெல்லாம் நம்பும் வகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்ற தொண்டர் ஆதரவு ஏதும் இல்லாத சில தலைவர்கள் தொடர்ந்து திமுகவை சீண்டிப் பேசி வந்ததால் கண்டிப்பாக கூட்டணி மாறும் என்ற நம்பிக்கை வலுக்க ஆரம்பித்தது.
ஆனால் அத்தனையும் தற்போது புஸ்வாணமாகியுள்ளது. கூட்டணி நீடிக்கும் என்று பிரணாப் கூறியது நிச்சயம் சோனியாவின் கருத்தாகவே இருக்க முடியும் என்பதால் ராஜா விவகாரத்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணி ரணகளமாகும் என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அதை விட முக்கியமாக ராஜா விவகாரத்தால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித சலசலப்பும் ஏற்படாததை சுட்டிக் காட்டும் அவர்கள், இந்தக் கூட்டணியில் இப்போதைக்கு விரிசல் வரும் வாய்ப்பே இல்லை என்றும் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.
பேனைப் பெருமாளாக்கி, ஈயை எரிமலையாக்கி அதில் ஆதாயம் காண முயல்பவர் ஜெயலலிதா.
அதே சமயம் மிகப் பெரிய பிரளயத்தையும் பக்கிங்காம் கால்வாய் அளவுக்கு சுருக்குவதில் கில்லாடி முதல்வர் கருணாநிதி.
கருணாநிதியின் நிதான அரசியலுக்கும், ஜெயலலிதாவின் அதிரடி அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த முறையும் 'நிதானமே' முதல் சுற்றில் வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications