பணிகிறார் எதியூரப்பா-தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

முதலி்ல் ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போட்டபடி, பதவி விலகவும் மறுத்து வந்த எதியூரப்பா இன்று கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று அறிவித்துள்ளார்.
நேற்று காலை டெல்லி வருமாறு அழைக்கப்பட்டிருந்தார் எதியூரப்பா. ஆனால் அவர் போகவில்லை. மாறாக புட்டபர்த்திக்குப் போய் விட்டார். அதேசமயம், தனது பிரதிநிதிகளாக அமைச்சர்கள் ஆச்சார்யா மற்றும் அசோக்கை அனுப்பி வைத்திருந்தார்.
இந் நிலையில் புட்டபர்த்தியிலிருந்து அவர் ஜம்மூ வைஷ்ணவி தேவி கோவிலுக்குப் போவதாக கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனி விமானத்தல் புட்டபர்த்தியிலிருந்து டெல்லி சென்றார். மாலையில் டெல்லி வந்து சேர்ந்த அவர் கட்சித் தலைவர் நிதின் கத்காரியை சந்திக்கவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று யாரும் என்னிடம் கூறவில்லை. நானும் ராஜினாமா செய்வதற்காக வரவில்லை என்றார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இந் நிலையில் எதியூரப்பாவைத் தொடர்பு கொண்ட கத்காரி, உடனடியாக அருண் ஜேட்லி உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களை சந்திக்குமாறு எதியூரப்பாவைப் பணித்தார். பின்னர் அவர் நாக்பூர் புறப்பட்டுப் போய் விட்டார்.
இதையடுத்து ஜேட்லி உள்ளிட்டோரை எதியூரப்பா இரவில் சந்தித்தார். அப்போது தான் அப்பாவி என்பதை அவர்களிடம் விளக்கினார். ஆனால் ஜேட்லி உள்பட யாருமே அவரது கருத்தை கேட்கவே தயாராக இல்லையாம். 3 நாட்களுக்குள் பதவியிலிருந்து விலகுங்கள். விலகுவதற்கு முன்பு அடுத்த முதல்வர் யார் என்பதையும் நீங்களே தெரிவியுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனராம். அனைத்து பாஜக தலைவர்களும் எதியூரப்பா விலக வேண்டும் என்று உறுதியாக கூறி விட்டதால் எதியூரப்பா தற்போது விலகியாக வேண்டிய கட்டத்துக்கு வந்துள்ளார்.
ஆனால் இதற்கு சில நிபந்தனைகளை எதியூரப்பா விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு பாஜக தலைமை கட்டுப்பட வேண்டும் என்று எதியூரப்பா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அடுத்த முதல்வரை நானே தேர்வு செய்ய அனுமதி தர வேண்டும், மூத்த பாஜக தலைவர்களான அனந்த்குமார், ஷெட்டார் ஆகியோரை கர்நாடக மாநில அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும், அவர்களை முதல்வராக்கக் கூடாது, புதிய முதல்வராபவர் ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது ஆகிய புதிய நிபந்தனைகளை எதியூரப்பா விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் சில நிபந்தனைகளை பாஜக தலைமை ஏற்றுள்ளது. அடுத்த முதல்வரை எதியூரப்பாவே முடிவு செய்யலாம் என்றும் அவருக்கு உரிமை தரப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று கத்காரியை சந்திக்க எதியூரப்பா முன் வந்துள்ளார். அப்போது தனது ராஜினாமா முடிவை எதியூரப்பா அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று காலை நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, கட்சித் தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டு்ப்படுவேன். கர்நாடக நிலைமை குறித்தும், அடுத்த ஒரு மாதத்தில் ஜில்லா பரிஷத் தேர்தல்கள் நடக்கவுள்ளதையும் தலைவர்களிடம் விளக்குவேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதே நேரத்தில் என் விஷயத்தில் தலைவர்கள் என்ன முடிவை எடுத்தாலும் ஏற்பேன்.
நான் லிங்காயத்து சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லி பாஜக தலைமையை மிரட்டவில்லை. நான் அனைவருக்கும் பொதுவான தலைவர் என்றார்.
முன்னதாக நேற்று டெல்லி வந்து சேர்ந்ததும் பாஜக தலைவர்களைச் சந்திக்காமல், தனக்கு ஆதரவாக உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த 17 எம்.பிக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் எதியூரப்பா. அப்போது அவர்களிடம் தனக்கு எதிராக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த்குமார், தார்வாட் வடக்கு எம்.பி. பிரகலாத் ஜோஷி, ரெட்டி சகோதரர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஜேட்லி உள்ளிட்டோரை அவர் சந்தித்தபோது, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவை இவ்வாறு அவமானப்படுத்தினால் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் கிட்டத்தட்ட மிரட்டல் போல தெரிவித்துத் கூறினாராம் எதியூரப்பா.
மறுபக்கம் எதியூரப்பாவுக்கு ஆதரவாக லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் அணிதிரண்டுள்ளனர். பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த 3 லிங்காயத் மடாதிபதிகள், எதியூரப்பாவை நீக்கினால், லிங்காயத்துகளின் ஆதரவை பாஜக இழக்க நேரிடும் என்று கூறினர்.
இதற்கிடையே, எதியூரப்பா குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியாமல் பாஜக மேலிடம் பெரும் குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சித் தலைவர்கள் அளவிலும் எதியூரப்பாவுக்கு சாதகமாக சிலர் உள்ளதால் முடிவு எடுப்பதில் பெரும் குழப்பம் செய்துவருகிறது பாஜக என்கிறார்கள். குறிப்பாக ராஜ்நாத்சிங், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் எதியூரப்பாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம் என்கின்றனராம்.
கர்நாடக பாஜக எம்.பிக்களுக்கு மத்தியிலும் எதியூரப்பா விவகாரம் சூடாக வெடித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கர்நாடக பாஜக எம்.பிக்கள் கூடிப் பேசியுள்ளனர். அப்போது ஒரு எம்.பி. எதியூரப்பாவை கடுமையாக சாடிப் பேசினார். இன்னொருவர் தீவிரமாக ஆதரித்துப் பேசியதால் அந்த இடத்தி்ல மோதல் ஏற்படும் சூழல் உருவானதாதம். மற்ற எம்.பிக்கள் இருவரையும் அமைதிப்படுத்தி சூட்டைத் தணித்தனராம்.
15 ஆண்டு நில பேரங்கள்-நீதி விசாரணைக்கு உத்தரவு:
இந் நிலையில் கடந்த 1995ம் ஆண்டு முதல் கர்நாடகத்தல் பல்வேறு முதல்வர்கள் மேற்கொண்ட நில ஒதுக்கீடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை எதியூரப்பா அமைத்துள்ளார்.
இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசு, ஜனதாதளம் அரசு காலங்களில் நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததா என்பதை கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே 1995ல் இருந்தே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ், ஜனதாதளம் தலைவர்களும் நில மோசடி விவகாரங்களில் சிக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications