தமிழகம் முழுவதும் தொடரும் கன மழை-ரயில் மீது மோதிய ராட்சத அலைகள்
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன் பாலத்தின் மீது சென்ற ரயில் மீது ராட்சத அலைகள் மோதியதால் பயணிகள் பீதியடைந்தனர். சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
இலங்கையை ஒட்டியுள்ள வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இரவு நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, கடலூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பாம்பனில் 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்றார்.
சென்னையில் மீண்டும் மழை:
சென்னை நகரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தற்போது காலையிலிருந்து தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர், அலுவலகங்களுக்குச் செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக நல்ல மழை பெய்தது. மழை காரணமாக 30 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளன. மண்டபம் பகுதியில் கடற்கரை அருகில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடிசைகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
ரயில் மீது வீசிய ராட்சத அலைகள்:
பாம்பனில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் பாம்பன் பாலத்தின் மீது ரெயில்கள் மெதுவாக சென்றன. கடலில் எழுந்த அலைகள், ரெயில் பெட்டிகள் மீது மோதியபடி இருந்தன. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
பரமகுடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏறத்தாழ 200 கிராமங்கள் மழை காரணமாக தீவு போல ஆகிவிட்டன. அவற்றுக்கு போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அந்த கிராமங்களில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள்.
ராமநாதபுரத்தில் உள்ள பெரிய கண்மாய், வைகை ஆற்று தண்ணீரால் முழுமையாக நிரம்பும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் முழுமையாக நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் அருகே திரு உத்தரகோசமங்கை கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையும், தொன்மை சிறப்பும் வாய்ந்தது. இந்த கோவிலில் உள்ள அக்னிதீர்த்த குளம் மழையால் நிரம்பி, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, நந்தி சிலை போன்ற அனைத்து பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரை, பம்பு செட் மூலம் வெளியேற்றி வருகிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை கொட்ட தொடங்கியது. பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், பெரும்பாலான இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
நாகை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. நாகை கடற்கரை சாலையில் உள்ள வேதநாயகம் செட்டி தெருவில் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேனி மாவட்டம் சோத்துப்பாக்கம் அணை பகுதியில் உள்ள ஊத்துக்குழி, குறவன் குழி, பேச்சியம்மன் சோலை, சுப்பிரமணியபுரம், கரும்பாறை, குண்டன்சி ஆகிய மலை வாழ் மக்களின் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
அந்த கிராமங்களுக்கு செல்லும் பாதையில் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பெரிய பாறைகளும், மரங்களும் விழுந்து உள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்த கிராமங்களுக்கு செல்ல முடிய வில்லை.
விருதுநகர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழை காரணமாக, சாத்தூர் அருகே நென்மேனி-வன்னிமடை இடையே வைப்பாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் சேதம் அடைந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள 6 சிறிய அணைகள் நிரம்பி உள்ளன. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டுதான் இந்த அணைகள் நிரம்பி உள்ளன.
ராஜபாளையத்தில் உள்ள மறிச்சிகட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, வயல் வெளிக்குள் புகுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் மழையால் நிறைந்து இருக்கிறது. இந்த குளத்தில் குளித்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ராகவ் சீனிவாசன் இறந்து விட்டார். அவர் மதுரையை சேர்ந்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
தடுப்பணைகள் சேதமடைந்தன:
மதுரை மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது. இந்த மழையால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் சேதமடைந்து விட்டன.
வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரை நகரில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடை பட்டு, விக்டர் பாலம் வழியாக மட்டுமே நடைபெறுவதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் பாதை 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. மழையால் 17-வது வளைவில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விட்டது. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிறுமலைக்கு செல்லும் பஸ்கள் 17-வது வளைவில் பயணிகளை இறக்கி விட்டு, வெறும் பஸ் மட்டும் அந்த பகுதியை கடந்து செல்கிறது. பின்னர் பயணிகள் பஸ்சில் ஏறிக்கொள்ள பயணம் தொடருகிறது.
செம்பட்டியில் உள்ள பழனி ரோட்டில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்த வழியே வந்த பஸ்சின் டிரைவர் இதை கவனித்து விட்டதால், பஸ்சை உடனடியாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் தண்ணீர் நிரம்பிய குளமாக காட்சி அளிக்கிறது. மழையால் இந்த மாவட்டத்தில் நேற்று 9 வீடுகள் இடிந்து விழுந்தன.
தூத்துக்குடி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்கிறது. இந்த மாவட்டத்தில் 57 வீடுகள் இடிந்து உள்ளன. இங்குள்ள 128 மானாவாரி குளங்களில் 57 குளங்கள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. மற்ற குளங்களில் பாதி அளவு தண்ணீர் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க 29 விசைப்படகு மீனவர்கள், பலத்த மழை-காற்று காரணமாக கரைக்கு திரும்பி விட்டனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்:
இதற்கிடையே, மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து, முதல்வர் கருணாநிதி இன்று (நேற்று) புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.
பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன.
இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து; நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
548 குடிசைகள் முழுமையாகவும், 1438 குடிசைகள் பகுதியாகவும், ஆக மொத்தம் 1,986 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
மழையின் காரணமாக உயிரிழந்த 179 கால்நடைகளுக்கும் உரிய நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கி வருகிறார்கள்.
40 ஆண்கள், 27 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 88 பேர் மழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சமும், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ ஒரு லட்சமும் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications