நாங்கள் லெனின் கருப்பனை மிரட்டவில்லை-நித்தியானந்தா சீடர்கள்
பெங்களூர்: நாங்கள் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்று நித்தியானந்தாவின் சீடர்கள் கூறியுள்ளனர்.
தானும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருந்த வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்றுஅந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்பும், வெளியிட்ட பின்பும் ரூ. 20 கோடி கொடுப்பதாக கூறி நித்தியானந்தா நிர்ப்பந்தம் செய்தார், அது முடியாததால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, இன்று வரை மிரட்டல் தொடருகிறது என்றும் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதை நித்தியானந்தாவின் சீடர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெங்களூர் அருகே பிடாதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்யானந்தாவின் சீடர்கள் பக்தானந்தா, சச்சிதானந்தா, அச்சலானந்தா, பிரியானந்தா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நித்தியானந்தா மீதான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் முடிவில் உண்மை இந்த சமூகத்திற்கு தெரியும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு லெனின் கருப்பன் இதே இடத்தில் (பிரஸ் கிளப்) வைத்து நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, நித்தியானந்தா தரப்பில் இருந்து அவருக்கு மிரட்டல் விடுப்பதாகவும், பணம் பேரம் பேசுவதாகவும் புகார் கூறி இருக்கிறார்.
நாங்கள் அவ்வாறு எந்த மிரட்டலும் அவருக்கு விடுக்கவில்லை. வழக்கு வாபசோ அல்லது எங்களுக்கு எதிராக செயல்படாமல் இருக்க அவருக்கு பணம் பேரமோ பேசவில்லை. அவர் வேண்டுமென்றே எங்கள் மீது இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எனவே, லெனின் கருப்பனுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
மேலும் பொய்யான புகார்களை கூறி வரும் லெனின் கருப்பன் மீது கர்நாடக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியான பீடத்தில் பெண் சீடர்களுக்கு எதிராக பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடப்பதாகவும் அவர் கூறுகிறார். அவர் சொல்வது போன்று எந்த சம்பவங்களும் இங்கு நடைபெறவில்லை.
உண்மைகள் வெளிவர உண்மை கண்டறியும் சோதனைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே போல், லெனின் கருப்பன் இந்த சோதனைக்கு தயாரா? என்று அவருக்கு சவால் விடுக்கிறோம். இந்த சோதனை மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான பதில் கிடைக்கும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்த சோதனை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
மேலும், எங்கள் மீது புகார் கூறும் எல்லோரும் இந்த சோதனையை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நாங்கள் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க தயாராக இருக்கிறோம்.
நித்தியானந்தா வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. சட்டவிரோதமாக அவை தயாரிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications