வேலூர் அருகே திமுக-விடுதலை சிறுத்தைகள் மோதல்: பஸ்கள் உடைப்பு-பதட்டம்!
வேலூர்: பேரணாம்பட்டில் திமுக, விடுதலை சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது. இதனால் அங்கு அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் நகராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். இதற்கான பணிகளை திமுக மாவட்டச் செயலாளர் காந்தி தலைமையிலான திமுகவினர் பணிகளை பார்வையிட்டனர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய பேரவையின் மாவட்டச் செயலாளர் வேதாச்சலம் உடன் சென்றுள்ளார்.
விழாவுக்கான அழைப்பிதழ், பேனர்கள் உள்ளிட்டவற்றில் தனது பெயர் இடம் பெறவில்லை என்று வேதாச்சலம் ஆவேசமாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமான வேலூர் நகர மன்ற தலைவர் ஆர்ஷத் வி.சி. மாவட்ட செயலாளர் வேதாச்சலத்தின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல வேதாச்சலத்தை கைது செய்யக் கோரி திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை சிலர் அடித்து உடைத்தனர். இதன் உச்சகட்டமாக , போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications