கிராமத்தினருடன் மோதிய ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள்-கமுதி அருகே பதட்டம்
கமுதி: சமீபத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விடுதலையான தலித் தலைவர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கமுதி அருகே பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன். கோவையில் நிதி நிறுவன அதிபரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் சிக்கி கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில்தான் இவர் விடுதலையாகியிருந்தார். இதையடுத்து தற்போது தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
கடந்த மூன்று நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கூட்டங்களைப் போட்டு வருகிறார்.
நேற்று கமுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் மண்டலமாணிக்கம் என்ற இடத்தைக் கடந்து கச்சேரி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டலமாணிக்கம் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெரும் திரளானோர் வந்து காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கிண்டல் செய்து கோஷமிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த கிராமத்தினர் ஆவேசமடைந்து கற்களை எடுத்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மீது வீசினர். பதிலுக்கு ஜான் பாண்டியன் ஆதரவாளர்களும் வீசியதால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இரு தரப்பினரும் சரமாரியாக மோதிக் கொண்டனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தினர், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த மோதல் குறித்த தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்குப் பரவியதால் அங்கு பதட்ட நிலை காணப்படுகிறது.
கமுதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications