8 கிலோ தங்கம் கொள்ளை: மேலும் 2 பேர் சிக்கினர்-400 கிராம் தங்கம், 2 கார்கள் பறிமுதல்
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி அருகே பேருந்தை வழிமறித்து நகைக்கடை ஊழியர்களிடம் இருந்து 8 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் தங்கம், 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து கடந்த 28-9-2010ல் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் காந்திலால், மகேந்திரசிங், சஜன்சிங் ஆகியோர் அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாசார்பட்டி அருகே வெம்பூரில் பேருந்தை சிவப்பு நிற கார் ஒன்று வழிமறித்தது.
அதில் இருந்து இறங்கிய 3 பேர் பேருந்தின் பின் இருக்கையில் இருந்த நகைக்கடை ஊழியர்கள் 3 பேர் வைத்திருந்த 8 கிலோ தங்கம் மற்றும் ஒரு செல்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த கேரள மாநிலம் பரச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அன்வர் என்ற பைசல், கர்நாடக மாநிலம் கொடைகரைகள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் ஆகியோரை தமிழக போலீசார் நேற்று கேரளாவில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் தங்கம் மற்றும் 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை நேற்று மசார்பட்டி போலீசார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications