ஆளுநர் ஆற்றிய உரை அவல உரையாக உள்ளது-ஜெயலலிதா
சென்னை: சட்டசபையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரை, அவல உரையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநரால் வாசிக்கப்பட்ட உரை, தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற அவல உரையாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஐந்து ஆண்டுகளாக, மின் உற்பத்தியை பெருக்கி, மின் பற்றாக்குறையை போக்காமல், ஆட்சி முடியும் தருவாயில், சில திட்டங்களை குறிப்பிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருப்பது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையைத்தான் காட்டுகிறது.
டீசல் பற்றாக்குறை காரணமாகவும், உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாகவும், தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓடாத சூழ்நிலையில், 2010 - 2011ஆம் ஆண்டில் மேலும் 3,000 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடாததிலிருந்து, கல்விக் கட்டண குறைப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணியை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முன்னணியில் விளங்கிய ஜவுளித் தொழில் இன்று நூல் விலை உயர்வு காரணமாக முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்தத் தொழிலை பாதுகாப்பதற்கான திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் குறிப்பிடாதது மிகவும் வேதனை அளிக்கிறது.
வீட்டு வசதித் திட்டம் உன்னதமான திட்டம் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. செங்கல், சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்ற நிலையில், 75 ஆயிரம் ரூபாய் மானியத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவது என்பது இயலாத காரியம்.
ஒரு லோடு மணல் விலை 18 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தற்போது விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் மணலின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இருக்கின்ற வீட்டை இடித்துவிட்டு செய்வதறியாது ஏழை, எளிய மக்கள் தவிக்கின்றனர்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிசை அகற்றும் வாரியமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மறந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் உள்ள சுமார் இரண்டரை லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற குடிசை மாற்று வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.
ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இறக்க காரணமாக இருந்த கருணாநிதி, கத்தார் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் ஒன்றை அமைக்க இருப்பதாக ஆளுநர் உரையில் இடம் பெறச் செய்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளும் சுகாதாரமற்ற நிலையங்களாக காட்சி அளிக்கின்றன. இவற்றை சரி செய்யக்கூடிய திட்டம் ஆளுநர் உரையில் இடம் பெறாதது மிகுந்த வேதனையளிக்கும் செயல்.
நதிநீர் இணைப்புத் திட்டம், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீடு ஆகியவை ஆளுநர் உரையில் இடம் பெறாததிலிருந்து, இவற்றை கருணாநிதி கைகழுவி விட்டுவிட்டார் என்பது தெளிவாகிறது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக ஆளுநர் உரையில் அறிவித்து இருப்பது வருத்தமளிக்கும் செயல் ஆகும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சட்ட விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், விலைவாசியை குறைக்கவும் எந்தவித திட்டங்களும் இந்த ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டிய ஆளுநர் உரை, கொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
திசை திருப்புகிறது தமிழக அரசு-சிபிஐ
முன்னதாக சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசைக் கடுமையாக குறை கூறி பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் கூறுகையில்,
பொய்யான காரணங்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். லஞ்சம் லாவண்யம்தான் வேகமாக நடைபெறுகிறது. வன்முறைகள் நடைபெறுகிறது. கொலைகள் நடைபெறுகிறது. கொள்ளை நடைபெறுகிறது. இதையெல்லாம் தடுக்க முயற்சி எடுக்கப்படவில்லை.
நேற்று எங்களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், திமுகவைச் சேர்ந்தவர் மேடையிலேயே ஏறி அவரை தாக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இதை சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது சொல்ல முயற்சி எடுக்கும்போது, தமிழக அரசு காவல்துறை மூலம் எங்களை வெளியேற்றி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
மதிமுகவின் சதன் திருமலைக்குமார் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறியது. தொடரும் மின்வெட்டை சீர்செய்யாமல் இருப்பது போன்ற விவகாரங்களை நாங்கள் விவாதிக்க வேண்டும் என்று கேட்டு, இந்த நேரத்தில் ஆளுநர் உரை தேவையில்லை என்று நாங்கள் குரல் எழுப்பியதால், எங்களை வெளியேற்றியிருக்கிறார்கள். இதனை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி கூறுகையில், இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் இநத அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இந்நேரத்தில் ஆளுநர் உரை தேவையில்லை.
விலைவாசி கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை இருக்கிறது. மக்களின் கோபத்தை நாங்கள் சபையிலே பிரதிபலித்திருக்கின்றோம். எங்களை தமிழக அரசு வெளியேற்றியுள்ளது. இந்த மாநில மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், கொடுங்கோல் ஆட்சி செய்துகொண்டிருக்கும் திமுக அரசுக்கு ஆளுநர் உரை தேவையில்லை. எங்களது நியாயமான கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பியபோது, வலுக்கட்டாயமாக எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போட்டுவிட்டார்கள். இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
13ம் தேதி வரை சட்டசபை நடைபெறும்
இதற்கிடையே, ஆளுநர் உரைக்குப் பின்னர் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தொடரை வருகிற 13ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில்,
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீதான விவாதம் மற்றும் பதிலுரை வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும். அவை மரபை மீறி நடந்த உறுப்பினர்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கும். அத்தொடரின் போது இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications