பாழடைந்த கிணற்றில் மிதந்த 2 சிறுமிகளின் உடல்கள்-கடத்திக் கொலை என சந்தேகம்
ஆற்காடு: வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 2 சிறுமிகளின் உடல்கள் கிணற்றிலிருந்து கைப்பற்றப்பட்டன. அவர்கள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்டுகிறது.
ஆற்காட்டை அடுத்துள்ள மேல்விஷாரம் ஜமிலாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆஜிரா பேகம். இவர்களுக்கு தானியா தாஷிபா (3), காஜியா நாஷிகா (2) என்ற 2 பெண் குழந்தைகளும், 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
நேற்று அவரது மகள்கள் 2 பேரும் திடீர் என்று மாயமானார்கள். அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மேல்விஷாரத்தில் தனியார் மருத்துவமனை அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள், பாழடைந்த கிணற்றில் 2 குழந்தைகளின் பிணம் மிதப்பதைப் பார்த்து அப்பகுதியில் வசிப்போரிடம் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்து இரு குழந்தைகளையும் மீட்டபோதுதான் அது காணாமல் போன சிறுமிகள் என்று தெரிய வந்தது.
இரு சிறுமிகளையும் கடத்திச் சென்ற நபர், குழந்தைகள் அழுதிருக்கும், அதைப் பார்த்து பயந்து போய் கிணற்றில் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
