அதிமுக ஆட்சியைப் போல இப்போது விவசாயிகள் எலிக்கறி சாப்பிடவில்லை-பொன்முடி

Subscribe to Oneindia Tamil

Ponmudi
சென்னை: வருமானம் கூடும் போது விலை உயருவது இயற்கை தான் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாத விவரம்:

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): விலைவாசி உயர்வை குறைக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? பதுக்கலை தடுக்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தை தடுக்கவும் முயற்சி எடுக்கப்பட்டதா? இடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தக்காளியை கிலோ மூன்று ரூபாய்க்கு விற்கின்றனர். அதுவே வெளியில் 40, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் இருக்கும்போது, நைஜீரியா நாட்டில் பருப்பு விளைவிக்கப் போவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் கூறுகிறார்.

அமைச்சர் வேலு: தக்காளி உற்பத்தி அதிகமாகும்போது விலை குறைகிறது. கச்சா எண்ணெய் விலை கூடும்போது, டீசல் வலை கூடுகிறது.

அமைச்சர் பொன்முடி: விலைவாசி எல்லா காலங்களிலும் உயர்ந்து வந்துள்ளது. அதற்கேற்ப வருமானம் கூடியிருக்கிறதா என்பதையுமி் பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டதாக, இதே வாயால் தான் நீங்கள் கூறினீர்கள். அதுபோன்ற நிலைமை இப்போது இல்லை. வருமானம் கூடும் போது விலை உயருவது இயற்கை தான்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): இலங்கையில் வெங்காயம் ராணுவ அதிகாரிகளை வைத்து விற்கப்படுகிறது. சீனாவில் நான்கு மாநிலங்களில் பட்டினிச் சாவு ஏற்பட்டு, மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இந்தியாவில் சாமானிய மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விலைவாசியை குறைக்க, மேற்குவங்க முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள், விலையை குறைப்பது பற்றி முடிவெடுக்க, தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வுக்கு நீங்களும் பொறுப்பு, நாங்களும் பொறுப்பு. இதை அரசியலாக்க முயற்சிக்காதீர்கள்.

சிவபுண்ணியம்: காங்கிரஸ் அரசு நியமித்த அமர்த்தியா சென் தலைமையிலான குழு தான், நாட்டில் 80 சதவீத மக்கள் வாழ முடியாத நிலையில் வசிப்பதாக தெரிவித்துள்ளது.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஐந்து பூதங்களோடு சேர்ந்து, ஆறாவது பூதமாக விலைவாசி உயர்வு சேர்ந்துள்ளது. நியூட்டனின் விதிப்படி, மேலே போன பொருள் எல்லாம் கீழே வர வேண்டும். ஆனால், இந்த விதியை பொய்யாக்கும் வகையில், மேலே போன விலைவாசி, கீழே வரவில்லை. கால் கிலோ, அரை கிலோ என்று தக்காளி வாங்கிய காலம் போய், ஒரு தக்காளி மூன்று ரூபாய், ஒரு முருங்கைக்காய் 15 ரூபாய் என்று விற்கப்படுகிறது. பறக்குது பாமாயில், துரத்துது துவரம் பருப்பு.

நிதியமைச்சர் அன்பழகன்: விலைவாசி உயர்வுக்கு பாலபாரதி வேதனை தெரிவித்தார். விலைவாசி உயர்வுக்காக, நானும் ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கிறேன். எந்த சூழ்ச்சியால் இந்த விலை உயர்ந்துள்ளது, எந்த முதலாளித்துவத்தை ஒழித்தால் காய்கறி விலை குறையும், எப்படி வெங்காய விலை இறங்கும் என்று சொன்னால், விலை உயர்வை கட்டுப்படுத்த உதவியாய் இருக்கும். விலைவாசி உயர்வு மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும் ஏற்படவில்லை. எங்களுக்கும், காங்கிரசுக்கும் கூட விலை உயர்ந்துள்ளது. இதற்கு தீர்வு என்ன என்று சொன்னால், விலைவாசியை குறைக்க அடிப்படை கொள்கை கிடைக்கும்.

பாலபாரதி: விலைவாசியை குறைப்பதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இது தொடர்பான கூட்டங்களில் துணை முதல்வர் பங்கேற்று கருத்துக்களை சொல்லி வருகிறார். உணவுப் பொருள்களை, ஆன்லைன் வர்த்தகத்தில், ஊக வாணிபத்தில் விற்பது தான் விலைவாசி உயர்வுக்கு காரணம்.

பீட்டர் அல்போன்ஸ்: வெங்காய விலை ஏற்றத்தை குறைக்க, ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். அங்கு சென்று, விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை என்று பாலபாரதி தரப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த, மேற்கு வங்கத்தில் என்ன செய்கின்றனர் என்று பாலபாரதி கேட்டு சொன்னால், அதை செய்யலாம்.

பாலபாரதி: எப்போது பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று மாநில முதல்வர்களுக்கே தெரிவதில்லை. பெட்ரோல், டீசல் விலையேற்றமும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. உணவுப் பொருள்களை, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

அமைச்சர் வேலு: விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, வெளிக்கடையில் ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்கும் துவரம் பருப்பை, ரேஷன் கடையில் 40 ரூபாய்க்கு விற்கிறோம்; 30 ரூபாய்க்கு பாமாயில் கொடுக்கிறோம். ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் டன் துவரம் பருப்பு, ரேஷன் கடைகள் மூலம் விற்கப்படுகிறது. இதோடு, தமிழகத்தில் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது.

பாலபாரதி: ரேஷன் கடைக்கு அருகில் உள்ள வெளிக்கடைகளில் விற்கும் அரிசி, பருப்பின் விலையை உங்களால் ஏன் குறைக்க முடியவில்லை?

வேலு: ரேஷன் கடைகள் மூலம் ஒரு கோடியே 75 லட்சம் கார்டுதாரர்களுக்கு குறைந்த விலையில் இவற்றை வழங்கி வருகிறோம். காரில் வந்து, சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்குபவர்களுக்காக பாலபாரதி பேசுகிறார்.

பாலபாரதி: மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாய் இருந்த திமுக, மத்திய அரசில் சேர்ந்து, தமிழக உரிமைகளை பறிகொடுத்து வருகிறது.

முன்னதாகப் பேசிய அதிமுக எம்எல்ஏ செந்தமிழன், இந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் விலைவாசி பெரிதும் உயர்ந்து உள்ளது. இதை கட்டுப்படுத்தபடாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வெங்காயத்தை உரித்தால், கண்ணீர் வரும். ஆனால் இந்த ஆட்சியில் வெங்காயத்தை நினைத்தாலே கண்ணீர் வருகிறது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். இதை கட்டுப்படுத்த கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மணல் கொள்ளை, அரிசி கடத்தல் பற்றி பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு விதித்த விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினார்கள். ஆனாலும் எங்கள் கோரிக்கைகளை செவி சாய்க்க இந்த அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் பல கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே நடந்த மாநகராட்சி தேர்தலில் நடைபெற்ற வன்முறையை நீதிமன்றமே கண்டித்தது. எல்லா விஷயங்களிலும் நீதிமன்ற கண்டனத்துக்கு அந்த அரசு ஆளாகிறது என்றார்.

இதன் பின்னர் ஒரு சினிமா குறித்து சில கருத்துக்களை செந்தமிழன் கூறினார். இதற்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை தெரிவித்து பதில் தந்தார். இதற்கு எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஆனால் இதை அ.தி.மு.க எம்எல்ஏக்கள் ஏற்காமல் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் பதிலுக்கு ஒரு வார்த்தையைக் கூற, இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அ.தி.மு.க. உறுப்பினர்களும் துணை சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. ஓ.பன்னீர்செல்வமும், துரைமுருகனும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் எழுந்து, தான் சொன்ன ஒரு வார்த்தையையும் (ஜெயலலிதா பற்றி) செந்தமிழன் சொன்ன வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து செந்தமிழன் பேசியது முதல் மு.க.ஸ்டாலின் பேசியது வரை உள்ள விவாதத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+